*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு
சித்தூர் : அரசு நிலத்தை முள்வேலி அமைத்து ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சுமித் குமார் தலைமை தாங்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
அதில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கழிவுநீர் கால்வாய் வசதி, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு தர வேண்டும், டிகேடி நிலத்துக்கு பட்டா தர வேண்டும் என்பது உள்ளிட்ட 496 மனுக்களை அளித்தனர்.
அதன்படி, கூட்டத்தில், சித்தூர் மாவட்டம் வெதுரு குப்பம் மண்டலம், மாக்மாம்பாபுரம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமம் அருகே 10க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு சொந்தமான விவசாயம் நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஏரி அருகே இருக்கும் அரசு நிலம் வழியாக தான் செல்ல முடியும்.
அந்த வழியை கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேர் எங்கள் விவசாய நிலத்திற்கு செல்ல வழி விடாமல் பாதையை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்டால் தூப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் வாட்ஸ்அப் மூலம் தூப்பாக்கி படத்தை அனுப்பியுள்ளனர். மேலும், நேற்று எங்கள் விவசாய நிலத்திற்கு சென்றபோது, மூவரும் விவசாயிகளை வழி மறித்து கடுமையாக தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த விவசாயிகள் காவல் நிலையத்தில் சென்று புகார் தெரிவித்தோம். ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் விவசாய நிலத்திற்கு செல்ல வழி ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட இணை கலெக்டர் வித்யாதாரி, டிஆர்ஓ மோகன் குமார் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். முன்னதாக மாக்மாம்பாபுரம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post துப்பாக்கியால் சுடுவேன் என மிரட்டுகின்றனர் அரசு நிலத்தை முள்வேலி அமைத்து ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.