திருமலை: தெலங்கானா மாநிலத்தில் தண்ணீர் கொண்டு செல்ல 44 கி.மீ. தூரம் கால்வாய்க்காக மலையை குடைந்து சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது சுரங்கப்பாதையில் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் 8 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி இன்று 2வது நாளாக நடந்து வருகிறது. இப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் டோமலபென்டா அருகே சைலம் அணையின் இடது கரையில் கால்வாய் தோண்டும் பணிகள் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதற்காக அங்குள்ள மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இதற்காக மொத்தம் 44 கிலோ மீட்டர் நீளம் சுரங்கப்பாதை தோண்டப்பட வேண்டி உள்ளது. இதில் சுமார் 34 கி.மீ. தூரம் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 9.559 கிலோ மீட்டர் சுரங்கம் தோண்டும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த திட்டத்தால் 3.41 லட்சம் ஏக்கருக்கு பாசனநீர் கிடைக்கும். 200 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும் உள்ளது. மேலும் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள உதய சமுத்திர திட்டமும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது. இப்பணியை விரைந்து நிறைவேற்ற இரவு, பகல் பாராமல் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பொறியாளர்கள் உட்பட 40 பேர் சிக்கிகொண்ட நிலைலையில் 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.
இதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டியை பிரதமர் நரேந்திரமோடி போனில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இன்று தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வந்து தேடும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் 2வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தொழிலாளர்கள் சிக்கியது எப்படி?
சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் உத்தம்குமார், ஜூபள்ளி கிருஷ்ணாராவ் கூறியதாவது:
சுரங்கத்தின் உள்ளே சிக்கியவர்களில் 2 பொறியாளர்கள், 2 இயந்திர ஆபரேட்டர்கள் மற்றும் 4 தொழிலாளர்கள் அடங்குவர். சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதை கண்ட இயந்திர ஆபரேட்டர்களில் ஒருவர் எச்சரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து 42 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். இருப்பினும், அதற்குள் பெரிய அளவிலான மண் சரிந்து, மறுபுறம் இருந்த 8 பேர் சிக்கிக்கொண்டனர். 8 பேரையும் உயிருடன் மீட்கும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றனர்.
The post தெலங்கானாவில் 44 கிமீ கால்வாய்க்கான சுரங்கம் தோண்டும் பணியின்போது மண்சரிவில் சிக்கிய 8 பேர் கதி என்ன?: 2வது நாளாக மீட்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.