புதுடெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா போன்று மேற்குவங்கத்திலும் மோசடி செய்து வெற்றி பெற பாஜ முயற்சிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை(2ம் தேதி) தேர்தல் ஆணையம், “வெவ்வேறு மாநிலங்களில் வாக்காளர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் தரப்பட்டிருந்தாலும், தொகுதி, வாக்குச்சாவடி மையங்கள் மாறுபட்டிருக்கும். நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும்.
எனவே, ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் தரப்படுவது போலியான வாக்காளர்கள் என அர்த்தமாகாது” என விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே தன் எக்ஸ் பதிவில், “தேரதல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் உண்மையில் தவறை மூடி மறைக்கும் செயல். ஏதோ தவறு இருப்பதாக ஒத்து கொண்ட தேர்தல் ஆணையம், அதை ஏற்க மறுக்கிறது.
வாக்காளர் அடையாள அட்டை எண்கள் மூன்று எழுத்துகள், ஏழு இலக்கங்களை கொண்ட எண்ணெழுத்து வரிசை. இதிலுள்ள மூன்று எழுத்துகள் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் வேறுபட்டவை என தேர்தல் ஆணைய கையேடு தௌிவாக கூறுகிறது. எனவே, ஒரே மாநிலத்தில் கூட வெவ்வேறு பேரவை தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே முதல் மூன்று எழுத்துகளை கொண்டிருப்பது சாத்தியமற்றது.
மேற்குவங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு உள்ளது போன்ற அடையாள அட்டை எண்கள் அரியானா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது? மேலும், இந்த எண்கள் வாக்காளர் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், நகல் எண்கள் வாக்களிக்க மறுக்கப்படுவதற்கு வழி வகுக்கும்.
இது பாஜவுக்கு ஆதரவாக வாக்காளர் அடக்குமுறையை நடத்துவதற்கான சதித்திட்டத்தை தெளிவாக காட்டுகிறது. அங்கு பாஜ அல்லாத இடங்களில் உள்ள வாக்காளர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்களை வழங்குவதன் மூலம் குறி வைக்கப்படுகின்றனர். பாஜவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டால் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க சாத்தியக்கூறுகள் இல்லை” என குற்றம்சாட்டி உள்ளார்.
* அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
போலி வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்த சர்ச்சைக்கு இடையே தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ஞானேஷ்குமார் தலைமையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான இரண்டுநாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், “சட்டத்திலும், தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்களிலும் தௌிவாக வரையறுக்கப்பட்டுள்ளபடி, அனைத்து மாநில, யூனியன்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வட்டார நிலையிலான தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் தங்கள் பங்கையும், பொறுப்பையும் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும்.
இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுடன் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி, சட்டப்பூர்வ கட்டமைப்புக்குள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். தேர்தல் குறித்த பிரச்னைகள் வாரியாக வரும் 31ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.
The post தேர்தல் ஆணையத்தின் போலி வாக்காளர் அடையாள எண் குறித்த விளக்கம் மூடி மறைக்கும் செயல்: திரிணாமுல் காங்கிரஸ் தாக்கு appeared first on Dinakaran.