டெல்லி: ரகசியம் காக்கும் விதமான தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவத்தில் நன்கொடை பக்கத்தில் தேர்தல் பத்திரம் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2018ம் ஆண்டு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 1000 ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான மதிப்பில் வழங்கப்படும் தேர்தல் பத்திரங்களை நன்கொடையாளர்கள் வாங்கி விரும்பிய கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வகை செய்தது.
ஆனால் இந்த திட்டத்தில் நன்கொடை யாரிடம் பெறப்பட்டது என்பது பற்றி எந்த கட்சியும் பொதுவெளியில் அறிவிக்க தேவையில்லை என்று விதிமுறை வகுக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர நடைமுறையில் ரகசியம் காக்கும் வகையில் விதிகள் இருப்பது சட்டவிரோதம் என அறிவித்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் 2023 -24 நிதியாண்டில் பாஜக ரூ.1,685.6 கோடி வருவாய் ஈட்டியது. நடப்பு நிதியாண்டில் மட்டுமே அக்கட்சிக்கு ரூ.4,340 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83% அதிகமாகும். காங்கிரஸ் கட்சி 2023ம் ஆண்டில் ரூ.268 கோடி மட்டுமே பெற்றது.
இந்நிலையில் வருமான வரித்துறையின் புதிய படிவத்தில் நன்கொடை வழங்கும் பிரிவில் எந்தந்த விதங்களில் வரும் நன்கொடைகளை கணக்கில் கொள்ளலாம் என்ற பட்டியலில் தேர்தல் பாத்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தல் பத்திரங்களை ரகசிய காப்பு நடைமுறை இல்லாத வகையில் மீண்டும் கொண்டு வர மத்திய பாஜக அரசு திட்டமிடுவதன் அறிகுறியே இது என்று சுட்டிக் காட்டும் பொருளாதார அறிஞர்கள், எதிர்காலத்தில் அவ்வாறு கொண்டு வந்தால் அதை படிவத்தில் சேர்ப்பதற்காக நாடாளுமன்றத்தில் மீண்டும் சட்டத்திருத்தம் செய்யாமல் அமல்படுத்தவே தேர்தல் பத்திரம் என்ற வார்த்தை படிவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
The post தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சி? appeared first on Dinakaran.