அமராவதி: நடிகை சவுந்தர்யா 1972 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் படையப்பா, சொக்க தங்கம், அருணாசலம் தவசி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் நீங்கா இடம் பிடித்தார். இவரது கடைசி படம் ஆப்தமித்ராவாக அமைந்தது.
சவுந்தர்யா ஏப்ரல் 17, 2004 ம் ஆண்டு தனது 31வது வயதில் விமான விபத்தில் உயிரிழந்தார். சவுந்தர்யா இறக்கும் போது அவர் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவருடைய உடல் கிடைக்கவில்லை. சவுந்தர்யா உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து இன்று, ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிட்டிமல்லு என்பவர் “நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார்.
ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார். இந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு, அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார்.
நிலத்தை மீட்க கோரிக்கை எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என தனது புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார். சிட்டிமல்லு தெரிவித்த புகார் மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ‘நடிகை சௌந்தர்யா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருகிறது’ என சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கமளித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “நடிகர் மோகன் பாபு உடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம். சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் தொடர்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புகிறேன். நடிகர் மோகன் பாபு, சௌந்தர்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
The post நடிகை சௌந்தர்யா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருகிறது: சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கம் appeared first on Dinakaran.