அமிர்தசரஸ்: சீக்கிய அமைப்புகளின் போராட்டத்தால் பாஜக எம்பி கங்கனா இயக்கி நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படம் பஞ்சாப்பில் வெளியாகவில்லை. அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. பாலிவுட் நடிகையும், இமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘எமர்ஜென்சி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்திரா காந்தியின் முந்தைய ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தை, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரேணு பிட்டியுடன் இணைந்து தயாரித்துள்ள கங்கனா ரனாவத்,
படத்தை இயக்கி உள்ளார். திரைக்கதையை ரிதேஷ் ஷா எழுதியுள்ளார். படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரும், அர்கோவும் இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் அனுபம் கேர், ஸ்ரேயாஸ் தல்படே, மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன், சதீஷ் கவுஷிக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கங்கனா ரனாவத் இயக்கி நடித்ததால், மிகுந்த எதிர்பார்ப்புடன் படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் குறித்து ஆதரவு விமர்சனங்களும், கண்டன விமர்சனங்களும் வந்துள்ளன.
இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) மற்றும் பிற சீக்கிய அமைப்புகள் நேற்று பஞ்சாப் முழுவதும் திரையரங்குகளுக்கு வெளியே போராட்டங்களை நடத்தின. இந்த திரைப்படத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் சீக்கியர்களை தீவிரவாதிகள் போன்றும், தேசியவாதிகளுக்கு எதிரானவர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறினர். மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் முக்கிய நகரங்களான லூதியானா, அமிர்தசரஸ், பாட்டியாலா, ஜலந்தர், ஹோஷியார்பூர், பதிண்டா ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளில் ‘எமர்ஜென்சி’ படம் திரையிடப்படவில்லை.
பஞ்சாப் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளுக்கு முன் பதற்றமான சூழல் நிலவியதால் மாநிலத்தில் இருக்கும் முக்கியமான மால்கள் மற்றும் திரையரங்குகளுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே திரைப்படம் வெளியானதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கங்கானா வெளியிட்ட பதிவில், ‘அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன். சீக்கிய மதத்தை பின்பற்றி வருகிறேன். எனது பிம்பத்தை கெடுக்கவும், எனது படத்திற்கு தீங்கு விளைவிக்கவும் பொய்யான பிரசாரத்தை சிலர் செய்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளான நேற்று மட்டும் ரூ.2.35 கோடி வசூலானதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு கங்கனாவின் படங்களில் இந்த படம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இரவு நேரத்தில் 36.25 சதவீதம் பேரும், பகல் நேரத்தில் 5.98 சதவீதம் பேரும் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா இயக்கி நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்திற்கு பஞ்சாப்பில் தடை: சீக்கிய அமைப்புகளின் போராட்டத்தால் பதற்றம் appeared first on Dinakaran.