* 15,158 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதார துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 15,158 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 1075 சர்வதேச நோயாளிகளுக்கும், 14,083 அறுவை சிகிச்சைகள் இந்தியாவை சேர்ந்த நோயாளிகளுக்கும் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ‘‘ என்றார். மேலும் மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் , ‘‘ ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் எந்த விதமான மோசடிக்கும் பூஜ்ய சகிப்பு தன்மை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகின்றது . இந்த விவகாரத்தில் மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் இதுபோன்ற பிரச்னைகளை சமாளிப்பதற்காக மூன்றடுக்கு குறைதீர்க்கும் முறை நடைமுறையில் உள்ளது” என்றார்.
* 3.99 லட்சம் பெண்களுக்கு பரிசோதனை
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு சுகாதார துறை அமைச்சர் ஜேபி நட்டா அளித்த பதிலில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசியான எச்பிவி உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசியானது உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை.
கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் உள்ளிட்ட பொதுவான தொற்று நோய் அல்லாதவற்றின் பரிசோதனை, மேலாண்மை மற்றும் தடுப்புக்கான மக்கள் தொகை முன்முயற்சியானது தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் விரிவான ஆரம்ப சுகாதார பராமரிப்பின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி வரை பஞ்சாபில் மட்டும் 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 3.99லட்சம் பேருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
* சீன தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு கூடுதல் விசா
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி ஏடி சிங், ‘‘காலணி, ஜவுளி மற்றும் பொறியியல் துறைகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் சீனாவில் இருந்து பெரும் இயந்திரங்களை வாங்கியுள்ளன. சீன தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியின்றி இவை பயன்படுத்தாமல் கிடக்கின்றன. இந்தியாவில் உள்ள இயந்திரங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான சீன தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அதிக விசாக்கள் வழங்கப்பட வேண்டும் என இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கருதுகின்றது” என்றார்.
The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.