டெல்லி : நாடாளுமன்ற வளாகத்தில் இந்தி திணிப்பு, கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள ஒன்றிய அரசுக்கு, நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அப்போது ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் பேசினார். தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு அவையிலேயே திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்ற வளாகத்தில், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு மற்றும் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காததைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து, பேனர்கள் ஏந்தியபடி, தமிழர்கள் பற்றிய அநாகரிகப் பேச்சுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்தியை ஏற்கமாட்டோம், மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என வைகோ தலைமையில் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருமாவளவன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட எம்.பி.க்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
The post நாடாளுமன்ற வளாகத்தில் இந்தி திணிப்பு, கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் appeared first on Dinakaran.