டெல்லி: வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக வாக்களித்துள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் எம்.பி. ஜி.கே.வாசன் வாக்களித்து இருக்கும் நிலையில், பாமக வாக்களிப்பை புறக்கணித்துள்ளது. வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. முன்னதாக மசோதா மீதான விவாதத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய மதிமுக உறுப்பினர் வைகோ, வக்ஃபு சட்டத்திருத்தம் கூட்டாட்சிக்கு எதிரான, ஜனநாயக விரோதமான, மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது. இதனை வாபஸ் பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள மக்களின் கருத்தும் அதுவாகத்தான் உள்ளது. இஸ்லாமிய சமூகம் மிகுந்த தொந்தரவுக்கு ஆளாகி உள்ளது. பல்வேறு நிகழ்வுகளால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். நாட்டில் அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை. நரேந்திர தபோல்கர் இந்துத்துவா சக்திகளால் கொல்லப்பட்டார். பேராசிரியர் எம்.எம்.கல்புர்க்கி அதே சக்திகளால் கொல்லப்பட்டார். கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் கொலை போன்ற நிகழ்வுகளால் அவர்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கின்றனர். ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையால் நாடு முழுவதும் இஸ்லாமிய சமூகத்தினர் பேரச்சத்தில் இருப்பதாக கூறினார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் தம்பிதுரை, சிவி. சண்முகம் உள்ளிட்ட 4 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். மசோதாவுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் எம்.பி. ஜி.கே.வாசன் வாக்களித்தார். வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து இருந்த நிலையில், அக்கட்சி எம்.பி. அன்புமணி ராமதாஸ் மசோதா மீதான வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
The post நாடு முழுவதும் இஸ்லாமிய சமூகத்தினர் பேரச்சத்தில் உள்ளனர்: வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வைகோ வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.