மும்பை: மும்பையில் நடைபெற்ற 2வது மாநில மின்துறை அமைச்சர்களின் குழு கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்று உரை நிகழ்த்தினார் ஒன்றிய அரசின் மின்சாரம், மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் தலைமையில் இன்று (27.02.2025) மும்பையில் நடைபெற்ற 2வது மாநில மின்துறை அமைச்சர்களின் குழு (Group of Ministers) கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாடு அரசின் சார்பாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை செயலாளர் பீலாவெங்கடேசன், மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர் விஷுமஹாஜன் உடன் பங்கேற்றார். இம்மாநாட்டில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள்ஆற்றிய உரை பின் வருமாறு: தமிழக முதல்வரின் இடைவிடாத முயற்சியினாலும் சீரிய வழிகாட்டுதல்களின் படியும் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் வளர்ந்து வரும் மாநிலமாகவும் பிறமாநிலங்களை காட்டிலும் சிறந்த மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.
மாநிலத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை குறிக்கோளாக கொண்டு, தமிழ் நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் மின் துறையின் நிதியை மேம்படுத்தவும் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடுஅரசு மின் துறைக்கு மின் மானியமாகரூ. 53,000 கோடி மற்றும் நிதி இழப்பீடு தொகையாக ரூ.52,000 கோடி என மொத்தம் ரூ.1.05 இலட்சம் கோடி அளவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்திறன் மற்றும் நிதிநிலை மேம்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் அதன் கட்டமைப்பினை மாற்றி பசுமை எரிசக்திக்கழகம், மின் உற்பத்திக் கழகம், மற்றும் மின் பகிர்மானக் கழகம் என்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18 ஆம்ஆண்டில் 19.47% இருந்த தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் ஒட்டு மொத்த தொழில் நுட்ப மற்றும் வணிக இழப்பீடு தற்போது 11.39% என வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் மின் கொள்முதல் மற்றும் வட்டி செலவினங்கள் மின் வாரியத்திற்கு மிகவும் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.
எனவே, மின் தேவை மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறை(AI) திறம் பட பயன்படுத்தப்பட்டு மின் கொள்முதல் திட்டமிடப்படுகிறது. மேலும், 20,000 மெகாவாட் அளவிற்கு நீரேற்று மின் நிலையங்கள் மற்றும் மின்கல சேமிப்பு (Battery Storage) அமைப்புகளை நிறுவும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டில் கிடைக்ககூடிய உபரி சூரிய மின்சக்தியை திறம்பட பயன்படுத்தவும் உச்ச நேர மின் கொள்முதல் செலவினங்கள் குறைக்கவும் வழிவகை செய்யும். ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களான REC/PFC உடன் பேச்சு வார்த்தை நடத்தி வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் பணம் வழங்கும் நாட்கள் 148 நாட்களாக இருந்தது தற்போது 48 நாட்களாக கனிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் அடக்க விலைக்கும் விற்பனை விலைக்கும் உள்ள இடைவெளி 8 பைசா/யூனிட் என குறைந்துள்ளது. இத்தகைய சீரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதிகரித்து வரும் மின் தேவை, கார்பன் உமிழ்வினால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை புதிய மின் உற்பத்திக்கு பெரும் சவாலாக உள்ளது. அதிகரித்து வரும் மின் தேவை மற்றும் கார்பன் உமிழ் வினை தடுத்திடும் நோக்கில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு, மின் சேமிப்பு மற்றும் மின் பகிர்மானம் ஆகியவற்றில் ரூ.2.00 இலட்சம் கோடி அளவிற்கு முதலீடு தேவைப்படுகிறது. இச்சவால்களை எதிர்கொள்ள அரசுடன் தனியார் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒரு மித்த நிதி ஆதரவும், பகிர்மான கழங்களின் நிதி நலனில் தீவிர மற்றும் சிறப்பு கவனம் செலுத்துவதும் அவசியமாகிறது. மின் பகிர்மானக் கழகங்களின் கடன் மறு சீரமைப்பிற்காக ஒரு விரிவான திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்தும் விதமாக கடன் சுமையினை பகிர்ந்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மின் பகிர்மானக் கழகங்களின் பொறுப்புகளை உறுதிப்படுத்தவும் கடன்கள் மேலும் அரிகரிக்காமல் தடுக்கவும் இத்திட்டத்தினை நிதி மறு சீரமைப்பு திட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், 16வது நிதிக்குழு அடுத்த 5 ஆண்டுகளுக்கான நாட்டின் பொது நிதி ஆதாரங்களை இறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், மின் துறைக்கான சிறப்பு மானியத்தின் முக்கியத்துவத்தினை நாம் ஒருகிணைந்து வலியுறுத்த வேண்டும்.
இத்தருணத்தில் மின் பகிர்மான கழகங்களின் நிதிநிலைமை மற்றும் உறுதித்தன்மையை பாதிக்கும் கொள்கை முடிவுகள் மற்றும் ஒழுங்கு முறை பிரச்சனைகள் மீது தங்களின் மேலானகவனத்தினை ஈர்க்க விரும்புகிறேன்.
1. ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்கள் (REC&PFC)கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைந்தபட்சம் 1.5% அளவிற்கு குறைக்கப்பட வேண்டும்.
2. சூரிய மேற்கூரை மின் சக்தி உற்பத்தி இணைப்புகளுக்கு தற்போதுள்ள நிகர மின் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
3. இந்திய சூரிய மின் உற்பத்தி கழகத்தின் (SECI)விற்பனை விகிதத்தினை(Trade Margin) குறைக்கப்பட வேண்டும்.
4. மத்திய மின் தொகுப்பில் பசுமை மின் உற்பத்தி, மின் கல சேமிப்பு மற்றும் மின் கடத்துக் கட்டண முறையில் தேசிய பகுதியினை மாற்றி அமைக்க வேண்டும். தற்போதுள்ள நடைமுறைகளினால், சில மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
5. தமிழ்நாட்டிற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மான(RDSS) திட்டத்தின் கீழ் மின் கட்டமைப்பு நவின மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200கோடிநிதிஉதவிக்குஉடனடியாகஒப்பளிப்புவழங்கவேண்டும்.
6. ரைகா-புகலுர் – திருச்சூர் உயர் மின் வழித்தடத்தினை தேசியதிட்டமாக அறிவித்து அதன் படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் பிரதிநிதியாக கலந்து கொண்டு, மாநிலத்தின் எரிசக்தி வளர்ச்சிக்கான தேவைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து முன் வைக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஒன்றிய மின் துறை இணை அமைச்சர் அவர்களுக்கும், இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிறமாநில மின் துறை அமைச்சர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து, தமிழ்நாட்டின் எரிசக்தித் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக, இந்த அமர்வில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறும் இந்த பொன்னான வேளையில் கேட்டு விடை பெறுகிறேன்.
The post நிகர மின் கணக்கீட்டு முறையில் மாற்றம் வேண்டும்: மாநில மின்துறை அமைச்சர்களின் குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு appeared first on Dinakaran.