கம்பம்: கம்பம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக தலமாக சுருளி அருவி உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இங்கு வருகின்றனர். பக்தர்கள் அருவியில் நீராடி அங்குள்ள பூதநாராயணன் கோயில் மற்றும் சுருளிப்பட்டியில் உள்ள வேலப்பர் கோயிலில் வழிபாடு செய்வது வழக்கம்.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி மற்றும் மேகமலை அருகே சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழையில்லை.
இதனால் சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து படிப்படியாகக் குறைந்து தற்போது ஒருவர் நின்று குளிக்கும் அளவுக்கே தண்ணீர் விழுகிறது. இதனால் சுருளி அருவிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குறைந்த தண்ணீரில் காத்திருந்து குளித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். கடந்த தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பலமுறை குளிப்பதற்கு தடை விதிக்கும் அளவுக்கு சுருளி அருவியில் தண்ணீர் கொட்டியது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா வேனை இயக்க வேண்டும்
சுருளி அருவி நுழைவுப் பகுதியில் இருந்து அருவி பகுதிக்கு செல்ல வனத்துறை சார்பில் ரூபாய் 10 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வேன் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் சுருளி அருவியில் இயக்கப்பட்டு வந்த வேன் பழுதாகி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் நுழைவுப் பகுதியில் இருந்து அருவிக்கு நடந்தே செல்கின்றனர். இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. ஆகையால் பழுதாகி நிற்கும் வேனை சரி செய்து உடனடியாக இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நீர்பிடிப்பில் மழை இல்லை: சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது appeared first on Dinakaran.