சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நன்னிலம் தொகுதி எம்எல்ஏ காமராஜ்( அதிமுக) பேசுகையில், “திருவாரூர் மாவட்டத்தில், காவிரி பாசன பகுதி மற்றும் வெண்ணாறு, வெட்டாறு பாசனப் பகுதிகளில் ஆறுகளைவிட, பாசன வாய்க்கால்கள் மேடாகிக்கொண்டிருக்கின்றன. எனவே, குறைவான தண்ணீர் ஆறுகளில் வருகிறபோது, வாய்க்கால்களில் சரியாக ஏறிச் செல்வது கிடையாது. எனவே, இந்தக் குறையைப் போக்குவதற்கு வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும். இல்லையென்று சொன்னால் தேவைக்கேற்ப தடுப்பணைகள் கட்டித்தரவேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “சுமார் ஆயிரம் தடுப்பணைகளை வருகின்ற ஆண்டில் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தால் கூடுமானவரையில் அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அதுதான் இன்றைக்கு நீர்வளத் துறையில் செய்யவேண்டிய ஒரு பெரிய திட்டமாக இருக்கிறது. தடுப்பணை கட்டுவதன்மூலம் அங்கே 4 அடி, 6 அடி தண்ணீர் தேங்க வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் நிற்பதால் கிட்டத்தட்ட ஒரு பர்லாங், இரண்டு பர்லாங் தூரத்திற்கு தண்ணீர் வருடம் முழுவதும் நிற்கும். அதனால் நீராதாரம் கிடைக்கிறது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
The post நீர்வள ஆதாரத்தை பெருக்க 1,000 தடுப்பணைகள் புதிதாக கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன் தகவல் appeared first on Dinakaran.