புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும், புதிதாக 2 வரி பிரிவுகள் சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தனிநபர் வருமான வரிச்சலுகை உயர்த்தப்பட வேண்டும் என ஒவ்வோர் ஆண்டும் நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஒன்றிய பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கடந்த பட்ஜெட்களில் தனிநபர் வருமான வரி சலுகை உயர்த்துவதுபோல் தோன்றினாலும், ஒரு சில தரப்பினருக்கு மட்டுமே அது பலன் அளிப்பதாக உள்ளது. 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. நிலையான வரிக்கழிவுகளுடன் சேர்த்து கணக்கிட்டால் ரூ.7 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியிருக்காது. இருப்பினும், நிபந்தனைகளின்படி இந்தச் சலுகை சில தரப்பினருக்கு மட்டுமே பலன் அளிக்கக் கூடியதாக உள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய பட்ஜெட்டில், வருமான வரி உச்ச வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோல், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் ஈட்டுவோர் 25 சதவீத வரி செலுத்தும் வகையில் புதிய வரிப் பிரிவு சேர்க்கப்படலாம் என தெரிகிறது. தற்போதுள்ள தனிநபர் வருமான வரி வரம்பின்படி ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோர் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.
இதுபோல், 80 சி வரிச் சலுகையில் பெறப்படும் பலன் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை உயரும் எனவும், 80 டி பிரிவில் இன்சூரன்ஸ்பிரீமியம் மூலம் பெறப்படும் வரிச்சலுகை ரூ.25,000ல் இருந்து ரூ.50,000 ஆகவும், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமான வரம்பில் உள்ளவர்களுக்கு வரி குறைப்பு அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது. இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைக்கான பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்’’ என்றார்.
The post பட்ஜெட் எதிர்பார்ப்பு தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக உயர்கிறது? புதிய வரிப் பிரிவுகள் சேர்க்கப்பட வாய்ப்பு appeared first on Dinakaran.