பந்தலூர்: பந்தலூர் அருகே ரோந்து சென்ற வனத்துறையினர் ஜீப்பை காட்டு யானை தலைகுப்புற கவிழ்த்ததில் டிரைவர் படுகாயமடைந்தார். நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேவாலா வனச்சரகம் பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் நேற்றிரவு வனத்துறையினர் யானை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உப்பட்டியில் இருந்து பந்தலூர் மற்றும் கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென குறுக்கிட்ட ஒற்றை காட்டு யானை சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வனத்துறை ஜீப்பை ஆக்ரோஷத்துடன் தந்ததால் குத்தி புரட்டி தள்ளியது. இதில், ஜீப் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் ஜீப்பில் இருந்த டிரைவரும், வேட்டை தடுப்பு காவலருமான ரமேஷ் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவருடன் பணியில் இருந்த வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்களுடன் சைரன் ஒலி எழுப்பி சத்தம் போடவே யானை அங்கிருந்து சென்றது. இதை தொடர்ந்து பலத்த காயமடைந்த ரமேஷ் பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
The post பந்தலூர் அருகே ரோந்து சென்ற வனத்துறை ஜீப்பை தாக்கி தலைகுப்புற கவிழ்த்த காட்டு யானை: டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.