திருமலை: தெலங்கானாவில் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 65ஆக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 65ஆக உயர்த்துமாறு மாநில உயர்கல்வி கவுன்சில் சமீபத்தில் அரசுக்கு முன்மொழிந்தது. அதன்பேரில் பேராசிரியர்களின் ஓய்வு வயது 60 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசு அதிகாரப்பூர்வமாக பிறப்பித்துள்ளது. இதன் மூலம், 60 வயதுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தங்கள் பணியில் தொடர்வார்கள். இந்த உத்தரவு யூஜிசி. ஊதிய அளவை பெறும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசு ஊதிய விகிதத்தில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு பொருந்தாது.
மாநிலம் முழுவதும் உயர்கல்வித்துறையின் அதிகார வரம்பின் கீழ் மொத்தம் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 2,800க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்களில், தற்போது 757 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 2,060க்கும் மேற்பட்ட பதவிகள் இன்னும் காலியாக உள்ளன. கிட்டத்தட்ட 73 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும், ஜே.என்.டி.யு.எச், உஸ்மானியா மற்றும் ககாதியா பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் ஒவ்வொருவராக ஓய்வு பெறுகிறார்கள். இந்த சூழலில், பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஓய்வு வயதை அதிகரித்து தெலங்கானா அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 65ஆக உயர்வு: தெலங்கானா அரசு உத்தரவு appeared first on Dinakaran.