பஹல்காமில் பெண்களை விட்டுவிட்டு, அவர்களது கணவர்களை தீவிரவாதிகள் வேட்டையாடினர். இதற்கு நேற்று இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கான பதிலையும், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விளக்கத்தையும் பெண் அதிகாரிகளான விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதில் அளித்தது. பயங்கரவாத தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘‘ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயருடன் நடந்த தாக்குலை விளக்க பெண் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தது ஒரு மிகச்சிறந்த நடவடிக்கை என்று அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டது. கர்னல் சோபியா குரேஷி: கர்னல் சோபியா குரேஷி இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் கார்ப்ஸின் அலங்கரிக்கப்பட்ட அதிகாரி ஆவார்.
இந்திய மண்ணில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் பயிற்சிகளில் ஒன்றான புனேவில் நடந்த பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவக் குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி இவர். அனைத்து ஆசியப் படைப் பிரிவிலும் ஒரே பெண் அதிகாரி இவர்தான். குஜராத்தைச் சேர்ந்த குரேஷி, உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். குரேஷி ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். கணவர் தாஜூதீன் குரோஷி இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருகிறார். சோபியா, 6 ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். விங் கமாண்டர் வியோமிகா சிங்: விங் கமாண்டர் வியோமிகா சிங், பல்வேறு விமானங்களை இயக்கியுள்ளார். தீவிர சூழ்நிலைகளில் பொதுமக்களை வெளியேற்ற மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.
இந்திய விமானப்படை விமானியை மணந்த வியோமிகா 2020 ஆம் ஆண்டில், அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு மீட்பு நடவடிக்கைக்கு தலைமை தாங்கினார். வியோமிகா சிங், என்சிசி-இல் இருந்தவர். பொறியியல் படித்துள்ளார். அவர் 2019ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் முழு நேர விமானியாக நியமிக்கப்பட்டார். வியோமிகா சிங் 2500 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஓட்டிய அனுபவம் கொண்டவர். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கடினமான சூழ்நிலைகளில் சேடக் மற்றும் சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை அவர் இயக்கியுள்ளார்.
The post பஹல்காமில் பெண்களை கதறவிட்டவர்களுக்கு உரிய பாடம்; 2 பெண் அதிகாரிகள் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி appeared first on Dinakaran.