புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நீதி பெற்று தரப்படும் என்றும் இதில் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகள், சதிகாரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது: கடந்த 22ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல், நாட்டின் அனைத்து மக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த தீவிரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். இந்த தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது இந்தியர்கள் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை உணர முடிகிறது. பஹல்காமில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையில் பள்ளிகள், கல்லூரிகளில் ஓர் உத்வேகம் வந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகம் வலுவடைந்து, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணாத வேகம் எடுத்து, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்தில், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருந்தன. நாட்டின் எதிரிகள், ஜம்மு காஷ்மீரின் எதிரிகள் இதை விரும்பவில்லை. தீவிரவாதிகளும் தீவிரவாதத்தின் மூளையாக இருப்பவர்களும் காஷ்மீர் மீண்டும் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால்தான் பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை,ஒருமைப்பாடு நம்முடைய மிகப்பெரிய பலமாகும். இந்த ஒற்றுமை, தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம்.
தேசத்தின் முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியர்கள் நம்மிடம் காணப்படும் இந்த ஆக்ரோஷம்தான் உலகம் நெடுகவும் இருக்கிறது. இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அனுதாபங்கள் குவிந்து வருகின்றன. உலகத் தலைவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். படுபயங்கரமாக புரியப்பட்ட இந்தக் கொடூரச் செயலை அனைவரும் கடுமையான சொற்களில் சாடியிருக்கிறார்கள். அவர்கள் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும், தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய போரிலே, 140 கோடி இந்தியர்களோடு நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும், நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியளிக்கிறேன். இந்தத் தாக்குதலில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். தாக்குதலை செய்தவர்களுக்கும், இந்த வஞ்சகச் செயலை திட்டமிட்டுக் கொடுத்தவர்களுக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது: பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.