டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி
உரையாற்றினார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாகிஸ்தானுடனான தாக்குதல் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதில்; “ராணுவ வீரர்கள், உளவுத்துறைக்கு தலைவணங்குகிறேன். தீரமிக்க ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு வீரவணக்கம். இந்தியாவின் ராணுவ பலத்தை கடந்த சில நாட்களாக காட்டி வருகிறோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய தாய்மார்களுக்கு சகோதரிகளுக்கு மகள்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இக்கட்டான காலத்தில் நமது ஒற்றுமையையும், அமைதியையும் காண முடிந்தது. பஹல்காம் தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட முறையில் எனக்கு மனவலியை தந்தது.
கருணை இல்லாமல் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் கொன்றனர். இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கினோம் ஆபரேஷன் சிந்தூர் என்பது பெயர் மட்டும் அல்ல; நமது உணர்வுகள்.ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தீவிரவாதிகள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பஹவல்பூர், முர்டிகேவில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் உலகளவிலான தீவிரவாதத்துக்கு பல்கலை.யாக செயல்பட்டன.
இந்தியாவின் தாக்குதல் தீவிரவாத முகாம்களை மட்டுமல்ல, தீவிரவாதிகளின் நம்பிக்கையையும் தகர்த்துள்ளது. நம் சகோதரிகளின் திலகத்தை அழித்த தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாக சுதந்திரமாக சுற்றி வந்த தீவிரவாதிகளை ஒரே தாக்குதலில் இந்தியா கொன்றுள்ளது. இந்தியாவின் அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தான் கதிகலங்கியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலுக்கு ஆதரவு அளிக்காமல் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டது. பள்ளிகள், வீடுகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் டிரோன்களும் ஏவுகணைகளும் இந்தியாவின் தாக்குதலில் வீழ்ந்ததை உலகமே வியந்து பார்த்தது. சாமானிய இந்தியர்களை குறிவைத்து பாக். தாக்குதல் நடத்தியது. தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு பதிலாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டது பாகிஸ்தான். இந்தியாவின் கடுமையான நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்து போனது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள், ராணுவ தளங்கள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான கொள்கையாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இருக்கும். தாக்குதலுக்கு இந்தியாவின் முப்படைகள் எப்போதும் தயாராகவே இருக்கும். அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது.பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் செயல்படும் தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் பிரித்துப் பார்க்க மாட்டோம். பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலக அரங்குக்கு நாம் தெரியப்படுத்தினோம். இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி மரியாதை நிகழ்வில் பாக். ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஒவ்வொருமுறையும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை புதிய மைல்கல்.
தீவிரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசும், ராணுவமும் செயல்பட்டால் ஒருநாள் அந்நாடு அழியும்.தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒரே நேரத்தில் நிகழ்த்த முடியாது. அதேபோல் தான் தீவிரவாத்தையும் வணிகத்தையும் ஒரே நேரத்தில் நிகழ்த்த முடியாது. பாகிஸ்தான் உயிர்த்திருக்க வேண்டுமென்றால் தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுமானால் தீவிரவாதம், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே நிகழும். இது போருக்கான காலமல்ல; அதே நேரத்தில் தீவிரவாத செயல்களுக்கான காலமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வளர்ந்த இந்தியா என்ற கனவு நிச்சயம் நிகழும்; அதற்கான வலிமையை இந்தியா நிகழ்த்திக் காட்டியுள்ளது” என பிரதமர் உரசாயாற்றினார்.
தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க தலையீடு பற்றி தனது உரையில் பிரதமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை. அமெரிக்க தலையீடு பற்றி எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்ட நிலையில் அதுபற்றியும் பிரதமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை.
The post பாகிஸ்தான் உயிர்த்திருக்க வேண்டுமென்றால் தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.