டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் முதல் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள ஈவென்ட் அப்பல்லோ அரங்கத்தில் மார்ச் 8ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவுடன் அரங்கேற்றம் செய்யப்பட்ட “வேலியண்ட்” சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.
இத்தகைய சாதனையைச் செய்திருக்கும் இளையராஜாவுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதனை தொடா்ந்து 13 நாடுகளில் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்ற உள்ளார். சிம்பொனி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அக். 6ம் தேதி துபையிலும், செப்.6ம் தேதி பிரான்ஸிலும் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார். இது தொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்கள் சிம்பொனி வேலியண்ட் உள்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். அவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நான் தலைவணங்குகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி இளையராஜா..!! appeared first on Dinakaran.