வாஷிங்டன்: பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார். சட்டவிரோத குடியேறிகளை திரும்ப பெறுவதிலும் இந்தியாவுக்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி முதல் முறையாக நேற்று முன்தினம் தொலைபேசியில் டிரம்புடன் உரையாடினார். இந்நிலையில், புளோரிடாவில் இருந்து ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்திற்கு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் நேற்று சென்றபடி அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தார்.
அப்போது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள இந்தியர்களை திரும்ப பெற மோடி சம்மதித்துள்ளாரா என்ற கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில், பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசினேன். அநேகமாக அடுத்த மாதம் அவர் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. பிரதமர் மோடி உடனான தொலைபேசி உரையாடலில் நிறைய விஷயங்களை பேசினோம். சட்டவிரோத குடியேறிகளை திரும்ப பெறும் விவகாரம் குறித்தும் பேசினோம். இந்த விவகாரத்தில் எது சரியானதோ அதை பிரதமர் மோடி செய்வார். நாங்கள் தொடர்ந்து அதைப் பற்றி பேசி வருகிறோம்’’ என்றார்.
சட்டவிரோத குடியேறிகளை திரும்ப பெற மறுத்ததற்காக கொலம்பியா மீது அதிபர் டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரி விதித்த நிலையில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, புளோரிடாவில் நடந்த வழியனுப்பு விழாவில் தனது கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசிய டிரம்ப், ‘‘நமக்கு உண்மையிலேயே தீங்கு விளைவிக்கும் வெளிநாடுகள் மீதும், வெளிநாட்டு நபர்கள் மீதும் கூடுதல் வரிகளை விதிக்கப் போகிறோம். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் பாருங்கள். அமெரிக்க பொருட்களுக்கு மிக அதிக வரிகளை சீனா விதிக்கிறது. இதே போல, இந்தியா, பிரேசில் போன்ற பல நாடுகள் உள்ளன.
நாங்கள் அமெரிக்காவே முதலில் என்ற கொள்கையை பின்பற்றுகிறோம். எனவே இனியும் அதிக வரி விதிப்பதை அனுமதிக்கப் போவதில்லை. வரி விதிப்பில் நியாயமான சிஸ்டம் கொண்டு வரப்படும். அதன் மூலம் அமெரிக்கா இன்னும் வளமாக்கப்படும், முன்பை விட சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்கும்’’ என்றார். ஏற்கனவே பதவியேற்பு விழாவின் போது, இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டியிருக்கிறார். அவரது பிரசாரத்திலும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
* நிதி அமைச்சரானார் ஸ்காட் பெசன்ட்
டிரம்ப் தனது புதிய நிர்வாகத்தில் நிதி அமைச்சராக கோடீஸ்வர முதலீட்டாளரான ஸ்காட் பெசன்ட்டை தேர்வு செய்திருந்தார். அவரது நியமனம் நாடாளுமன்ற செனட் அவையால் நேற்று உறுதி செய்யப்பட்டது. செனட் நிதிக்குழுவில் 16-11 என்ற வாக்குப்பதிவில் பெசன்ட் நியமனம் உறுதியானது. தன்னை ஓரினச் சேர்க்கையாளர் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர் அமெரிக்க நிதி அமைச்சர் பதவியை பெறுவது இதுவே முதல் முறை. பல நாடுகள் மீது வரிவிதிப்பு, உள்நாட்டில் செலவு குறைப்பு, வரி சலுகை என பொருளாதார ரீதியாக டிரம்ப் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் நிதி அமைச்சர் பெசன்ட் தேர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிரம்ப் தனது அமைச்சரவையில் எலான் மஸ்க், லிண்டா மெக்மோகன் (டபிள்யூடபிள்யூஇ மல்யுத்த நிர்வாகி வின்ஸ் மெக்மோகனின் மனைவி), ஹோவர்ட் லுட்னிக், ஸ்காட் பெசன்ட் என முழுவதும் கோடீஸ்வரர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
* 3ம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர தடை
புதிய பாதுகாப்பு அமைச்சராக பீட் ஹெக்சேத் பதவியேற்ற நிலையில் அவரது முதல் நாளில் அதிபர் டிரம்ப் பல்வேறு உத்தரவுகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ராணுவத்தில் 3ம் பாலினத்தவர்களுக்கு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன்படி பென்டகனின் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர அமைச்சர் ஹெக்சேத்துக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்ததால் கடந்த 2021ல் 8,200 வீரர்கள் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களை மீண்டும் ராணுவத்தில் உரிய சேவைகளில் சேர்க்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
The post பிரதமர் மோடியுடன் பேசிய பின் அதிபர் டிரம்ப் மிரட்டல் இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும்: சட்டவிரோத குடியேறிகளை திரும்ப பெறுவதிலும் அழுத்தம் appeared first on Dinakaran.