கச்சார்: அசாமின் பிஹாரா ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வடகிழக்கு மாநிலமான அசாமின் கச்சார் அடுத்த பிஹாரா ரயில் நிலையம் வழியாக, ஷில்லாங்கிலிருந்து தின்சுகியாவுக்கு சென்ற பராக் – பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. பிஹாரா ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த போது தீப்பிடித்ததால், பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
ரயில் பெட்டிகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சக்கரங்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக ரயில்வே போலீசாரும், ரயில் நிலைய ஊழியர்களும் உடனடியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால், அந்த ரயில் சுமார் 45 நிமிடங்கள் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு அந்த ரயில் இயக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர். முன்னதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 22 அன்று, லக்னோவிலிருந்து மும்பைக்குச் சென்ற புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிராவின் ஜல்கான் கடந்து சென்ற போது, அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது; அதனால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
ரயில் நின்றவுடன் பயணிகள் பதற்றமடைந்து திடீரென ரயிலில் இருந்து கீழே இறங்கினர். அப்போது எதிர்திசையில் இருந்து வந்த ரயில் ஒன்று, தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருந்தும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ பரவியதாக வதந்தி பரப்பப்பட்டதாக தெரியவந்தது.
The post பிஹாரா ரயில் நிலையம் அருகே அசாமில் தீப்பிடித்து எரிந்த ரயில்: பயணிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.