பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் புற்றுநோய்குறித்த எச்சரிக்கையின் பரப்பை 85% ஆக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்காமல், இப்போதுள்ள 40% நீடித்தாலே போதுமானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளுக்கும் ஒருவரைப் புகையிலை கொல்கிறது. இந்த விகிதம் 2030-ல் 3 நொடிகளுக்கு ஒருவர் என்ற அளவில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் மட்டும் புகையிலை பறித்த உயிர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 கோடி. இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேரின் இறப்புக்குப் புகையிலை காரணமாக இருக்கிறது என்று சொல்கிறது ஓர் ஆய்வு. வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இதய நோய், சுவாசம் தொடர்பான நோய்களையும் உள்ளடக்கியது இந்த எண்ணிக்கை. இந்தியப் புற்றுநோயாளிகளில் ஆண்களை மட்டும் எடுத்துக்கொண்டால், சரிபாதிப் பேருக்குப் புற்றுநோய் ஏற்படுவது புகையிலையால்தான்.
ஆனால் அரசுக்கோ, அரசில் அங்கம் வகிப்பவர்களுக்கோ இதைப் பற்றியெல்லாம் என்ன கவலை இருக்கிறது என்று தெரியவில்லை. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “பீடி என்பது இயற்கையான பொருட்களைக் கொண்டது. பீடி புகைப்பதால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை” என்றெல்லாம் உளறியிருப்பது ஓர் உதாரணம்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல என்பதால்தான், புகையிலைப் பொருட்களுக்கு அதீத வரிவிதிப்பு, பொது இடங்களில் அவற்றின் பயன்பாட்டுக்குத் தடை என்று இன்ன பிற கட்டுப்பாடுகள் மூலம் புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்க முற்படுகிறோம். அப்படியான முயற்சிகளில் ஒன்றாக அன்புமணி ராமதாஸ் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட நடைமுறைதான், புகையிலைப் பொருட்களின் உறைகளில் புற்றுநோய் எச்சரிக்கையின் பரப்பைப் பெரிதாக்குவது என்பது. இதனால் முற்றிலுமாகப் புகையிலைப் பயன்பாடு குறைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை என்றாலும், நிச்சயமாக ஒருவிதமான அச்சத்தையும் குற்றவுணர்வையும் இத்தகைய எச்சரிக்கைகள் ஏற்படுத்தின. கொஞ்சம் கொஞ்சமாகப் புகைப் பழக்கத்திலிருந்து அவர்களை விடுவிடுக்க இந்த முயற்சிகளெல்லாம் உதவக்கூடும். இந்த நடைமுறை கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்த காலத்திலிருந்தே இதை ஒழித்துக்கட்ட சிகரெட் நிறுவனங்கள் பெரிய அளவில் ‘லாபி’செய்துவந்தன. இப்போதைய அரசின் முடிவை சிகரெட் நிறுவனங்களின் முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி யாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. சுகாதாரத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது இந்த முடிவு.
பிரதமர் மோடியின் நண்பர்களில் ஒருவரான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகளும் எம்.பி-யுமான சுப்ரியா சுலே, அரசின் இந்த முடிவுகுறித்துத் தெரிவித்திருக்கும் கருத்து கவனிக்கத் தக்கது. “என் தந்தை புற்றுநோயிலிருந்து விடுபட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும், ஒவ்வொரு முறையும் மருத்துவப் பரிசோதனைக்குத் தந்தையை அழைத்துச் செல்லும்போதெல்லாம் வயிற்றில் இனம்புரியாத ஒரு பயம் உண்டாகிறது” என்று சுப்ரியா சுலே சொல்லியிருக்கிறார்.
சரத் பவார் புகையிலைப் பழக்கத்தால் புற்றுநோய்க்கு ஆட்பட்டு மீண்டவர். சகல செல்வாக்கும் அதிகாரமும் உள்ள ஒருவரின் குடும்பத்தினரையே புற்றுநோய் இப்படி உலுக்குகிறது என்பதற்கு உதாரணம் இது. எனில், பணம், மருத்துவ வசதி, அதிகாரம் ஏதுமில்லாத சாமானியர்களின் குடும்பங்களைப் புகையிலையும் புற்றுநோயும் எப்படியெல்லாம் வதைக்கும்? லட்சக் கணக்கான சாமானியக் குடும்பங்களின் நெஞ்சத்தைச் செல்லரித்துக்கொண்டிருக்கும் விவகாரம் இது. அரசு புகையிலைக்கு எதிராக முன்னோக்கிச் செல்ல வேண்டும்; பின்னோக்கி அல்ல!
– தி இந்து