சென்னை: ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள ஏ.பி.சி திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்படுவதாக வந்த அறிவிப்பினை தொடர்ந்து பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக அகாடெமிக் கிரெடிட் வங்கித் திட்டம் (Academic Bank of Credit scheme – ஏபிசி திட்டம்) செயல்பாட்டில் உள்ளது. ஒரு மாணவர் கல்லூரி படிப்பை தொடங்கும்போதே அவருக்கென ஒரு கணக்கு தொடங்கப்பட்டு அவர் படிக்க விரும்பும் படிப்புக்கான மதிப்பெண் சேர்க்கப்படும்.
பின்னர் ஒவ்வொரு செமஸ்டரும் முடிக்கும்போது தேர்ச்சியாகும் தாள்கள், இதர செயல்பாடுகளுக்கான மதிப்பெண் கிரெடிட்டாக கொடுக்கப்படும். இது வங்கி கணக்கைப் போல சேர்ந்து கொண்டே போகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாணவர் ஒரு படிப்பை, முதலாம் ஆண்டை, 2ம் ஆண்டை மற்றொரு கல்லூரியிலும் கூட சேர்ந்து படிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு மாணவர் ஒரே படிப்பை பல கல்லூரிகளில் தொடர்வது என்பது நடைமுறை கல்வி திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாகும்.
ஒரு கல்லூரியில் இருந்து விலகி மற்றொரு கல்லூரிக்கு சென்றால் அங்கு அவர்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதிகப்படியான மாணவர்கள் ஒரே கல்லூரியில் சேரும் பட்சத்தில் அக் கல்லூரியில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். மேலும் தேர்ச்சி அடைந்தால் எந்தப் பல்கலைக் கழகத்தின் அதிகாரம் பெற்ற பட்டப்படிப்பு சான்றிதழை பெறுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
இந்நிலையில் ஏ.பி.சி திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இதற்கு அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, தமிழ்நாடு அலுவலகச் செயலாளர் சுதாகர் கூறியதாவது: உயர்கல்வியை இணையவழி கல்வியாக்குவதன் மூலம் அதனை தனியார்மயம், வியாபாரமயம் ஆக்குவதற்காகவே இந்த ஏபிசி திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியது. ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நாட்டின் எந்தப் பல்கலைகழகத்திலும் 70% பாடங்கள் வரை இணைய வழியில் பயிலலாம் என்ற ஏபிசி திட்டம் பல்கலைக்கழக அமைப்பிலும் உயர்கல்வியிலும் பெரும் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது.
அரசுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் சூழலில் தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கி மாணவர்களை தள்ளுவதே ஏபிசி திட்டத்தின் நோக்கமாக இருக்கும். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் இந்த திட்டத்தை அமல்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சென்னை பல்கலைக்கழகம் இந்த திட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.
மேலும் இத்திட்டத்தை திரும்பப் பெறும் வகையில் ஒன்றிணைந்து குரல் எழுப்புமாறு ஆசிரியர்களையும் மாணவர்களையும் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சுதாகர் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “கடந்த 2021-2022ம் கல்வியாண்டு முதல் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் ஏபிசி திட்டத்தின் ஐடி-யை திறக்க வேண்டும் என சென்னை பல்கலைக் கழகம் அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதன் பிரச்னை யாருக்கும் இன்னும் முழுமையாக புரியவில்லை. புதிய கல்விக் கொள்கையின் ஒரு திட்டமான ஏபிசி திட்டம் நடைமுறையில் உள்ள கல்வி திட்டத்தை முழுமையாக பாதிக்கும். இதனால அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறையும் ஆபத்து உள்ளது. தனியார் கல்லூரிகளுக்கே இது லாபத்தை பெற்றுத் தரும். உயர் கல்வியில் 47 சதவீதமாக உள்ள தமிழ்நாடு, படிப்படியாக குறைய தொடங்கும். கடந்த வாரம் நடைபெற்ற அகாடமிக் கவுன்சில் கூட்டத்தில் கூட இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது” என்றார்.
* இடைநிற்றல் அதிகரிக்கும்
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: திட்டங்களை மேலோட்டமாக பார்க்கும்போது நல்லதாக தெரியும். ஆனால் அதனை பற்றி முழுமையாக ஆராய்ந்தால் அதில் உள்ள சிக்கல்கள் புரிய வரும். கல்வியை பொருத்தவரை ஆரம்பித்தால் அதனை தொடர வேண்டும். 3 வருட படிப்பை 1 வருடத்தில் முடித்துக் கொண்டு போவதும், 4 வருடம் கழித்து தொடரலாம் என்பதும் நடைமுறைக்கு சாத்தியமல்ல. ஏபிசி திட்டம் நடைமுறைக்கு வரும்போது மாணவர்கள் அதிக பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனால் இடைநிற்றல்கள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாக ஏபிசி திட்டம் அறிமுகம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்த கடும் எதிர்ப்பு: கல்வியாளர்கள், பேராசிரியர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.