புதுடெல்லி: ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020ஐ உடனடியாக அமல்படுத்தகோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்தாமல் இருந்து வருவது மாணவர்களின் கல்வி தரத்தை பாதிப்படைய செய்கிறது. மேலும் அது மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை போன்றே மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நிராகரித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அது அவர்களின் கொள்கை சார்ந்த ஒன்று. எனவே அதில் தலையிட விரும்பவில்லை. மேலும் தமிழ்நாடு அரசு செய்வது அடிப்படை உரிமையை மீறும் செயல் ஒன்றும் கிடையாது ” என்று தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.