திருமலை: புஷ்பா 2 படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற பெண் கூட்டநெரிசலில் சிக்கி இறந்தார். அவரது மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லுஅர்ஜூன் நடித்த `புஷ்பா 2’ பான் இந்தியா படம் இன்று அதிகாலை ரிலீசானது. இதையொட்டி பல இடங்களில் உள்ள தியேட்டர்கள் முன் ரசிகர்கள் கூட்டம் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் திரண்டனர். பெரும்பாலானோர் குடும்பம், குடும்பமாக சினிமா பார்க்க வந்தனர்.
இதேபோல் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் தில்சுக் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனது மனைவி ரேவதி (39), மகன் ஸ்ரீதேஜ் (9), மகள் சன்விகா (7) ஆகியோருடன் இன்று அதிகாலை ஐதராபாத் ஆர்.டி.சி.எக்ஸ் சாலையில் உள்ள தியேட்டருக்கு புஷ்பா 2 சினிமா பார்க்க சென்றனர். அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. சாலை முழுவதும் தள்ளுமுள்ளு காணப்பட்டது.
இருப்பினும் கூட்டநெரிசலை பொருட்படுத்தாமல் பாஸ்கர் தம்பதி தங்கள் பிள்ளைகளுடன் தியேட்டர் வளாகத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஸ்கர் குடும்பத்தினர் சிக்கினர். கீழே விழுந்துவிட்ட அவர்கள் மீது பலர் விழுந்தனர். இதில் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இதனால் சினிமா தியேட்டர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அனைவரையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தில் ரேவதி, தேஜ் இருவரும் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தேஜ் சுயநினைவில்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையறிந்த பாஸ்கர் கதறி அழுதார். இதையடுத்து போலீசார், ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post புஷ்பா 2 படம் பார்க்கச்சென்றபோது ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி: மகன் சீரியஸ்: அதிகாலையில் சோகம் appeared first on Dinakaran.