திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மத்திய உளவுத்துறை (ஐபி) பெண் அதிகாரி மேகா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காதலனும், சக ஐபி அதிகாரியுமான சுகாந்த் சுரேஷ் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் மேகா (24). மத்திய உளவுத்துறை (ஐபி) அதிகாரி ஆவார். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 24ம் தேதி சாக்கை பகுதியில் ரயில் மோதி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மேகா செல்போனில் பேசியபடியே ரயில் முன்பு பாய்ந்தது தெரியவந்தது. கடைசியாக அவரிடம் செல்போனில் பேசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மேகாவின் தந்தை மதுசூதனன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என் மகள் மேகா கொச்சி விமானநிலையத்தில் பணிபுரியும் சக ஐபி அதிகாரியான சுகாந்த் சுரேஷ் என்பவரை காதலித்து வந்தார். அவர் திருமணம் செய்வதாக கூறி பின்னர் ஏமாற்றி விட்டார். மேகாவிடம் இருந்து சுகாந்த் சுரேஷ் லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். ஒருமுறை என் மகள் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்டார். மேகாவின் தற்கொலைக்கு சுகாந்த் சுரேஷ் தான் காரணம். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கிடையே சுகாந்த் சுரேஷ் தலைமறைவானார். அவரை போலீசார் தேடிவந்தனர். ஆனால் அவர் போலீசிடம் சிக்கவில்லை. இதற்கிடையே முன்ஜாமீன் கோரி சுகாந்த் சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே மேகா தற்கொலை வழக்கில் சுகாந்த் சுரேஷின் பங்கு குறித்து கேரள போலீசார் மத்திய உளவுத்துறைக்கு ஒரு அறிக்கை கொடுத்தனர். தொடர்ந்து சுகாந்த் சுரேஷை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து மத்திய உளவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
The post பெண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் உளவுத்துறை அதிகாரி திடீர் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.