கொல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31வயது மதிக்கத்தக்க பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆக. 10ம் தேதி தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் தொடர் போராட்டத்தையும் நடத்தியதையடுத்து இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 120க்கும் மேற்பட்ட சாட்சிகளிடமிருந்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்து சுமார் 66 நாள் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த கொல்கத்தா சியல்டா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கி இருந்தது. அதில், ‘‘சஞ்சய் ராய் தான் குற்றத்தை செய்தார் என்பதற்காக 11 ஆதாரங்கள் உறுதியாக புலப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் சஞ்சய் ராய் குற்றவாளியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். தண்டனை விவரங்கள் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து குற்றவாளி சஞ்சய் ராய் நேற்று காலை சியல்டா நீதிமன்றத்திற்கு நேரில் அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் குற்றவாளி கிடையாது. அதுபோன்று அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி உட்பட சிலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிபிஐ மற்றும் இறந்த பெண் பயிற்சி மருத்துவர் பெற்றோர் ஆகியோர் தரப்பிலும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அதுகுறித்த மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தண்டனை விவரத்தை பிற்பகல் 2.45மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து மேற்கண்ட வழக்கில் கொல்கத்தா சியல்டா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனீர்பான் தாஸ் நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்களை வழங்கினார், அதில், ‘‘பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் என்பது மிகவும் அரிதிலும் அரிதானது கிடையாது. எனவே குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மேலும் அவருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
கொல்கத்தா போலீஸ் விசாரித்திருந்தால் மரண தண்டனை கிடைத்திருக்கும்: சி.பி.ஐ மீது மம்தா பானர்ஜி அதிருப்தி
சியால்டா நீதிமன்ற தீர்ப்பு குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அளித்த பேட்டியில், ‘‘குற்றவாளிக்கு மரண தண்டனை தரப்பட வேண்டுமென அனைவரும் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். இந்த வழக்கு எங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. கொல்கத்தா காவல்துறை விசாரித்திருந்தால், மரண தண்டனையை உறுதி செய்திருப்போம். ஆனால் சிபிஐ விசாரணை எப்படி நடந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை. மாநில காவல்துறை விசாரித்த இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே இந்த தீர்ப்பால் நான் திருப்தி அடையவில்லை’’ என்றார்.
நீதியை கேலி செய்வது போல் உள்ளது: பாஜ
தீர்ப்பு குறித்து பாஜ ஐடி பிரிவு தலைவரும் மேற்குவங்க இணை பொறுப்பாளருமான அமித் மால்வியா கூறுகையில், ‘‘ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு நீதியை கேலி செய்வது போல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். மேற்கு வங்க முதல்வர் மம்தா, குற்றவாளியை காப்பாற்றுவதை நிறுத்த வேண்டும். சாட்சியங்களை அழித்ததில் அப்போதைய கொல்கத்தா போலீஸ் கமிஷனரம் மற்றும் முதல்வரின் பங்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமல்லாமல், அது நியாயமாகவும் பாகுபாடின்றியும் இருக்க வேண்டும்’’ என்றார்.
The post பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனை: கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.