டெல்லி : பெரு நிறுவனங்களின் அழுத்தத்தால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2 வகை அரிசியை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாக மரபணு மாற்றத்திற்கு எதிரான கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. டிஆர்ஆர் தன் (கமலா), பூசா டிஎஸ்டி 1 ஆகிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2 வகை அரிசியை ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளவும் அரிசி விளைச்சலை 30% வரை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் ஆரோக்கியம் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என மரபணு மாற்றத்திற்கு எதிரான கூட்டமைப்பு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பெரு நிறுவன லாபிகளின் அழுத்தத்தால் மத்திய அரசே சட்டவிரோதமான செயல்களை செய்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் உள்ள ஆபத்து குறித்து ஏராளமான அறிவியல்பூர்வ சான்றுகள் உள்ளதாக சுட்டி காட்டியுள்ள அந்த அமைப்பு, இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள், நாட்டின் பன்முகத்தன்மை உடைய அரிசி மரபணு தொகுப்பை ஆபத்தில் ஆழ்த்தும் என்று எச்சரித்துள்ளது. எந்த வித பாதுகாப்பு பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமல் இந்த அரிசி வகைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மரபணு மாற்றத்திற்கு எதிரான கூட்டமைப்பு சாடி உள்ளது. அறிவுச் சார் சொத்துடைமை தொழில்நுடப்ங்களை அறிமுகப்படுத்தபடுவதால் விவசாயிகளின் விதை இறையாண்மையில் அரசு சமரசம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இந்த புதிய வகை அரிசியின் அறிவுசார் சொத்துரிமை குறித்த வெளிப்படைத்தன்மையை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த அரிசி வகைகளில் செய்யப்பட்ட பாதுகாப்பு சோதனை விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்று கோரியுள்ள அந்த அமைப்பு, பொது நலனுக்கு தீங்கு விளைவிக்காது என்பதையும் ஒன்றிய அரசு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
The post பெரு நிறுவனங்களின் அழுத்தத்தால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2 வகை அரிசியை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு : வலுக்கும் எதிர்ப்பு!! appeared first on Dinakaran.