புதுடெல்லி: டெல்லி பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நிலையில் மொத்தமுள்ள 70 பதவிக்கு 699 பேர் போட்டியிட்டுள்ளனர். கெஜ்ரிவால் தொகுதியில் அதிகபட்சமாக 23 பேர் போட்டியிட்டுள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப். 5ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் குறிப்பிடும்படியாக முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவை பாஜகவும், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தை காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.
குறைந்தபட்சமாக படேல் நகர், கஸ்தூரிபா நகர் ஆகிய இரு தொகுதிகளிலும் தலா ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திலக் நகர், கரோல் பாக், காந்தி நகர், கிரேட்டர் கைலாஷ், மங்கோல் பூரி, திரிநகர் ஆகிய தொகுதிகளில் தலா ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், டெல்லியின் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. தேர்தல் கள நிலவரம் குறித்து பாஜக மூத்த தலைவர் ஷெஷாத் பூனவல்லா கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சி தங்களது வேட்பாளர்களில் குற்றவழக்கில் தொடர்புடையவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகிறது. ஆனால் அக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில், 60% வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் குற்றப்பின்னணி கொண்டவர்களை களமிறக்கி உள்ளது’ என்றார்.
டெல்லியில் வரும் பிப். 5ம் தேதி வாக்குப்பதிவும், வாக்குகள் எண்ணிக்கை பிப். 8ம் தேதியும் நடக்கிறது. டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பின்னடைவுகளைச் சந்தித்தது. கடந்த 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. தற்போதைய தேர்தலில் ஆளும் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதால் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? காங்கிரஸ் எத்தனை சீட்களை பெறும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரசும், ஆம்ஆத்மியும் ஒன்றாக இணைந்து ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் தேர்தலை எதிர்கொண்டன. ஆனால் இந்த தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுவதால், தொங்கு சட்டசபை அமையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நிலையில் டெல்லியில் 70 பதவிக்கு 699 வேட்பாளர்கள் போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் 23 பேர் போட்டி appeared first on Dinakaran.