டெல்லி : காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்த இந்த தாக்குதலில், 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்தனர்.பதிலுக்கு ஹமாஸ் அமைப்பை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு இதுவரை 44,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பணயகைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் காரணமாக 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தத்தை தொடர்ந்தும், ஹமாஸ் பிடியில் சிக்கி இருக்கும் பணையக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். போர் நிறுத்த அறிவிப்பு காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வரவேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இது காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகளை வழங்க வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், போர் நிறுத்தம் செய்யவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post போர் நிறுத்த ஒப்பந்தம் : காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வழிவகுக்கும் : இந்திய வெளியுறவுத் துறை appeared first on Dinakaran.