பாலக்காடு: போலி மருந்து விளம்பர விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோருக்கு எதிராக கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனத்தின் மீது பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. போலியான விளம்பரங்கள், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் வர்த்தக முத்திரை மீறல் போன்ற வழக்குகள் மேற்கண்ட நிறுவனத்திற்கு எதிராக போடப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில், பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியுள்ளது. இருப்பினும், அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறினால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பதஞ்சலி விளம்பர வழக்கில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் அளித்த மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்றம் பதஞ்சலிக்கு நான்கு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. கொரோனா நோயைக் குணப்படுத்துவதாகவும், நவீன மருத்துவம் பயனற்றது என்றும் பாபா ராம்தேவ் கூறுவதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றம் சாட்டியது. இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ், பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் திவ்யா பார்மசி என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில், மேற்கண்ட இருவரும் நேற்று ஆஜராகாததால் அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, போலியான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதாக கூறி கேரளாவை சேர்ந்த திவ்யா பார்மசி என்ற நிறுவனம் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது.
The post போலி மருந்து விளம்பர விவகாரம்; பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்: கேரள நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.