கார்கோன்: மகா கும்பமேளா மூலம் பிரபலமான நீலக் கண்ணழகி மோனாலிசாவுக்கு இயக்குனர் மூலம் ஆபத்து இருப்பதாக தயாரிப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலம், கர்கோன் மாவட்டப் பகுதியைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே (16), உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மாலை, மணிகளை விற்றுவந்தார். அங்கு அவர், தனது நீலக் கண் தோற்ற அழகால் பிரபலமானார்.
பிறகு அதன் காரணமாகவே அவர் பல இடையூறுகளையும் சந்தித்தார். இறுதியில் தனது வாழ்வாதாரமான மாலை, மணி வியாபாரத்தை விட்டுவிட்டு, அங்கிருந்து தனது சொந்த ஊருக்கே சென்றார். தற்போது அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’ படத்தின் மூலம் அறியப்பட்ட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தில் தான் மோனாலிசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், வெள்ளித்திரையில் வருவதற்கு முன்பாக கேரளா மாநிலத்திற்கு மோனாலிசா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில் மோனாலிசாவுக்கு ஆபத்து இருப்பதாக சினிமா தயாரிப்பாளர் ஜிதேந்திர நாராயண் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கும்பமேளாவில் கண்டறியப்பட்ட மோனாலிசாவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சினிமா இயக்குனர் சனோஜ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளது. ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற படத்தை தயாரிக்க சனோஜிடம் போதுமான பணம் இல்லை. ஆனால் அவர் மோனாலிசாவை தன்னுடன் அழைத்துச் சென்று அவரை பிரபலப்படுத்தி வருகிறார்’ என்று கூறினார்.
இதுகுறித்து மோனாலிசா வெளியிட்ட பதிவில், ‘சனோஜ் மிஸ்ராவுக்கு எதிரான விமர்சனங்களில் எந்த உண்மையும் இல்லை. யாருடைய அழுத்தத்திலும் நான் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். மத்தியப் பிரதேசத்தில் தற்போது நடிப்பைக் கற்றுக் கொண்டுள்ளேன். எனது சகோதரியும், எனது மைத்துனரும் என்னுடன் உள்ளனர். தயாரிப்பாளர் சனோஜ் மிஸ்ரா, என்னை அவரது மகளைப் போல நடத்துகிறார். அவர் நல்ல மனிதர்; எனது படம் வெற்றியடைய மக்கள் உதவ வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post மகா கும்பமேளா மூலம் பிரபலமான நீலக் கண்ணழகி மோனாலிசாவுக்கு ஆபத்து: இயக்குனர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.