புதுடெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் ஒருநாள் ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்த வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சோனியா காந்தி, “மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் பல லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களுக்கு பாதுகாப்பு வலையாக உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை தற்போதைய பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக தேக்க நிலையில் உள்ளது.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவு. மேலும், ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத்தொகையை திருப்பி செலுத்தவே பயன்படுத்தப்படுகிறது” என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, “இந்த திட்டத்தை தக்க வைத்து விரிவுப்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும். திட்ட பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்த வேண்டும். இந்த ஊதியங்கள் சரியான நேரத்தில் பயனாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டும். மேலும் இத்திட்டத்தின் உத்தரவாதமான பணி நாட்களை 100லிருந்து 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
The post மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ஒருநாள் ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்த வேண்டும்: 150 வேலை நாள்களாக அதிகரிக்க வேண்டும்; சோனியா காந்தி கோரிக்கை appeared first on Dinakaran.