மும்பை: மகாராஷ்டிராவில் புனேவில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ள நிலையில், நோயின் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் GBS எனப்படும் குயிலின் பார் சிண்ட்ரோம் நோயின் தாக்கம் மக்களை அச்சுறுத்தியுள்ளது. இதுவரை 101 பேர் ஜிபிஎஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், இவர்களில் 68 பேர் ஆண்கள், 33 பேர் பெண்கள் என்று மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 16 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
ஜிபிஎஸ் நோய் என்பது நரம்பு மண்டலங்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக வருவதாகவும், இந்த நோயின் தாக்கம் குறித்து தெரியவர சில நாட்களோ, சில வாரங்களோ கூட ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு தொற்று நோய் அல்ல, ஆனால் ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகும் என்று கூறப்படுகிறது. இது அரியவகை நோய் என்றாலும், புனேவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜிபிஎஸ் நோய் அறிகுறிகளாக தசைகளை பலவீனமாக்கி பக்கவாதம் ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது.
ஜிபிஎஸ் நோய் அனைத்து வயது உடையோரையும் பாதிக்கும் என்ற போதிலும், குறிப்பாக ஆண்கள் மற்றும் வயது வந்தோரே இதனால் அதிகம் பாதிப்பு அடைவது தெரிய வந்துள்ளது. இந்த நோயின் தாக்கம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து முழுமையாக கண்டறியப்படாவிட்டாலும், பெரும்பாலோனோர் வைரஸ் மற்றும் பாக்டீரிய தொற்று காரணமாகவே ஜிபிஎஸ்-ஆல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஜிபிஎஸ் நோய்க்கு ஊசி மற்றும் பிளாஸ்மா பரிமாற்றம் மூலமாக சிகிச்சை அளிக்கலாம் என்றும் ரத்தத்தை சுத்திகரித்து மீண்டும் செலுத்தும்போது முன்னேற்றம் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
The post மகாராஷ்டிராவில் புனே பகுதியை அச்சுறுத்தி வரும் GBS நோய்: 101 பேர் பாதிப்பு; ஒருவர் உயிரிழந்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.