திருவனந்தபுரம்: மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசனை நடத்திய பின்னரே ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு மாநிலத்தின் தற்போதைய விகிதாசார இடங்களை குறைக்காமல் மக்களவை தொகுதிகளை மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களுக்கு இதில் பாதிப்பு ஏற்படக்கூடாது. சுதந்திரத்துக்குப் பிறகு ஒன்றிய அரசு கொண்டு வந்த மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு கொள்கைகளால் மக்கள் தொகையைக் குறைத்த மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை குறைப்பது நியாயமற்றது. இதில் தவறிய மாநிலங்களுக்கு இது வெகுமதி அளிப்பது போல அமையும்.
விகிதாச்சார அடிப்படையில் தென்மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்ற ஒன்றிய அரசின் வாதத்தை நம்ப முடியாது. இந்த விகிதமானது தற்போதைய நாடாளுமன்ற இடங்களின் சதவீதத்தின் அடிப்படையிலா, அல்லது மக்கள்தொகை புள்ளிவிவரங்களின் அடிப்படையிலானதா என்பதையும் ஒன்றிய அரசால் தெளிவுபடுத்த முடியவில்லை. இந்த இரண்டு வழிகளிலும் தென்னிந்திய மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும். தன்னிச்சையான செயல்களைத் தவிர்த்து, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியின் சாரத்தைக் காப்பது ஒன்றிய அரசின் பொறுப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு முடிவு எடுக்கக் கூடாது: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை appeared first on Dinakaran.