* தினமும் 3 ஆயிரம் பேர் வரை பயன்பெறுவர்
* மாதம் ரூ.22 லட்சம் செலவு
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையின் உள் நோயாளிகளுக்கும் சுவை, சுகதாரத்துடன் நவீன சமையலறையில் அன்றாடம் தயாரித்து மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் அன்றாடம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநோயாளிகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் உள் நோயாளிகளுக்கு மதுரை அரசு மருத்துவமனையிலேயே மூன்று வேளையும் உணவு, பால், பிரட், முட்டை துவங்கி கஞ்சி வரையிலும் தேவைக்கேற்ப, இங்குள்ள நவீன சமையலறையில் பணியாளர்களைக் கொண்டு தயாரித்து சூடாக சுவை, சுகாதாரத்துடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளின் படுக்கைக்கே நேரடியாக சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சிகிச்சைக்கு சேரும்போதே நோயாளிகளிடம் உணவுக்கான விருப்பம் பெறப்பட்டு, அவரவர் தேவைக்கேற்ப பல்வேறு விதங்களில் உணவு விநியோகிக்கப்படுகிறது. உதாரணமாக எம் அன்ட் பி வகை விரும்புவோர் பால், பிரட் மற்றும் முட்டை பெறுகின்றனர். இதுதவிர, மூன்று வேளையும் உணவு சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு காலையில் இட்லி, சாம்பார், பால், மதிய உணவாக சாதம், புளிக்குழம்பு அல்லது சாம்பார், பருப்பு, கீரை பொரியல், தயிர், அவித்த முட்டை, சுண்டல், பிரட், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இரவில் ரவா கிச்சடி, குருமா, வாரத்தில் இரு நாட்கள் சப்பாத்தி போன்றவை வழங்கப்படுகிறது. காசநோய் உள்ளிட்ட பாதிப்புகள் உடையவர்களுக்கு அதிக சத்துள்ள உணவளிக்க வேண்டும். இதனால் பால், முட்டை கூடுதலாக வழங்கப்படுகிறது.
‘புரோட்டின் ரிச் டயட்’ என்ற வகையில் மூன்று வேளை உணவுடன் கூடுதலாக பால், மதிய உணவுடன் 4 முட்டைகள், டிபனுடன் இரு முட்டைகள் வழங்கப்படுகிறது. நான் கம்யூனிகபிள் டிசீஸ் எனும் பிரிவின் கீழ், சில நோயாளிகளுக்கு உப்பு இல்லாமல் உணவுகள் வழங்கப்படுகிறது. காய்கறிகள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், ‘டியூப்டு பீடிங்’ என்ற வகையில், படுக்கை நோயாளிகளாக மூக்கு, தொண்டையில் செருகிய டியூப் மூலம் உணவருந்தும் நோயாளிகளுக்கும் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. இதன்படி பால், கஞ்சி, அடித்தெடுத்த பச்சை முட்டை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுதவிர 300க்கும் குறைவானவர்கள் தங்கள் உணவை தாங்களே பார்த்துக் கொள்வதாக விருப்பம் தெரிவிப்பதால், இவர்கள் தவிர மற்ற உள்நோயாளிகள் அனைவருக்கும் சரியான நேரத்தில் சுகாதாரத்துடன் உணவினை பணியாளர்கள் வழங்குகின்றனர்.
இதற்காக அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நவீன அடுப்புகள் உள்ளிட்ட வசதிகளுடன் ‘மாடர்ன் கிச்சன்’ அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த சமையலறைப் பணியில் மட்டுமே 26 பேர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாதம்தோறும் நோயாளிகள் உணவுக்கென மதுரை அரசு மருத்துவமனை தரப்பில் மட்டும் ரூ.22 லட்சம் வரை செலவாகிறது. அரசிடம் கிலோ ரூ.1 என்ற விலையில் அரிசி பெறப்படுகிறது. மதுரை ஆவின் பால், மதுரை சிறை கைதிகள் தயாரிப்பிலான பிரட் ஆகியவை பெற்று விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தரம் பரிசோதிக்கப்படுகிறது…
மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு இங்குள்ள சமலையறையில் அன்றாடம் தயாராகும் உணவுகள் மூன்று வேளைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகளை அவர்களிடம் வழங்கும் முன்பாக, அவற்றின் சாம்பிள் எடுக்கப்பட்டு அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அருள் சுந்தரேஸ்குமார், நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணன் ஆகியோரிடம் அளிக்கப்படுகிறது. அவர்கள் தரப்பில் இந்த உணவுகளின் தரம் பரிசோதனை செய்யப்பட்டு, வழங்கலாம் என்ற அனுமதி பெறப்பட்ட பிறகே, நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சுவை, சுகாதாரத்துடன் மூன்று வேளையும் சத்துமிக்க உணவு appeared first on Dinakaran.