சென்னை: “மத்திய அரசு, ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதி நிலையை வெகுவாகப் பாதித்துள்ளது” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். அப்போது தமிழக அரசின் நிதிநிலை குறித்து அவர் பேசியது: “2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2,20,895 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வணிகவரிகளின் கீழ் 1,63,930 கோடி ரூபாய், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் 26,109 கோடி ரூபாய், வாகனங்கள் மீதான வரிகளின் கீழ் 13,441 கோடி ரூபாய் மற்றும் மாநில ஆயத்தீர்வையின் கீழ் 12944 கோடி ரூபாய் வரி வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகும்.