போபால்: மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்த ராகுல் (25). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 17 வயதான மைனர் பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் அந்த பெண், யுவராஜ் என்பவரை காதலித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் தனது காதலை ரகசியமாக தொடர்ந்து வந்தார் அந்த பெண்.
இந்நிலையில் காதலன் யுவராஜுடன் இணைந்து தனது கணவன் ராகுலை கொலை செய்ய அந்த பெண் திட்டமிட்டார். இதன்படி, கடந்த 13ம் தேதி ராகுலுடன் பைக்கில் சென்றபோது, தனது செருப்பு கழன்றுவிட்டதாக கூறி பைக்கை நிறுத்த கூறியுள்ளார். உடனே ராகுலும் பைக்கை நிறுத்தினார். அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த யுவராஜின் நண்பர்கள் 2 பேர் ஓடி வந்து, ராகுலை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். பின்னர் உடைந்த பாட்டிலால் ராகுலின் உடலில் சுமார் 36 முறை குத்தி கொலை செய்தனர்.
அதன் பிறகு, அவரது மனைவி, தனது கள்ளக்காதலன் யுவராஜுக்கு வீடியோ காலில் பேசி ராகுலின் சடலத்தை காட்டியுள்ளார். பின்னர் ராகுலின் உடலை வயல் பகுதியில் வீசிவிட்டு 3 பேரும் தப்பி சென்றனர். இதற்கிடையில் ராகுல் மற்றும் அவரது மனைவியை காணவில்லை என அவர்களது உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, ராகுலின் உடல் வயல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராகுலின் மனைவி, அவரது கள்ளக்காதலன் யுவராஜ் மற்றும் யுவராஜின் நண்பர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேரை நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர்.
The post மத்திய பிரதேசத்தில் பயங்கரம் கணவனை கொன்று கள்ளக்காதலனிடம் வீடியோ காலில் பேசிய கொடூர மனைவி appeared first on Dinakaran.