புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பயாபர் கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அதேபகுதியில் உள்ள தன் தோழி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர் சிறுமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சிறுமி புவனேஸ்வரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
70 சதவீத தீக்காயமடைந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த சிறுமி விமானம் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில்,சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியின் உடல் நிலை நன்றாக இருக்கிறது. ரத்த அழுத்தமும் சீராக இருக்கிறது என்று புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சியான பிஜேடி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பாலங்கா காவல் நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பிஜேடி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
The post மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஒடிசா சிறுமிக்கு டெல்லி எய்ம்சில் மேல் சிகிச்சை: விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார் appeared first on Dinakaran.