புதுடெல்லி: மாஞ்சோலை எஸ்டேட் விவகாரத்தில் மறுவாழ்வு திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். முன்னதாக இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மாஞ்சோலை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுக்க போகிறது.
அது எந்த மாதியானது என்பது குறித்து எங்களுக்கு தெளிவாக விரிவிக்க வேண்டும்’ என கேள்வியெழுப்பி இருந்தது. மேலும் மாஞ்சோலை பகுதியில் இருக்கும் அகஸ்தியர் மலையை ஆய்வு செய்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 4ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விகரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘இந்த தோட்டத்தில் வசித்த குடும்பங்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
வனப்பகுதியை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், இது வகைப்படுத்தப்பட்ட காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 250க்கும் அதிகமானவர்கள் அரசின் மறுவாழ்வு திட்டங்களை ஏற்றுக் கொண்டு விண்ணப்பங்களை கொடுத்திருந்தார்கள். அதில் 200 பேருக்கு மேல் மறுவாழ்வு திட்டங்களுக்கான அரசாணை கொடுக்கப்பட்டு விட்டது. இன்னும் சிலர் மட்டும் தான் பாக்கி உள்ளனர். அவர்களும் ஆதார் அட்டை எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை தர மறுப்பதால் தான் இந்த விவகாரம் இன்னும் முடிவடையாமல் இருந்து வருகிறது’ என்று தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மாஞ்சோலை பகுதியில் இருப்பவர்கள் கடந்த மூன்று தலைமுறைகளுக்கு மேலாக அங்கே வசித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றார். இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே மறுவாழ்வு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதை தவிர்த்து கூடுதலாக எந்தவிதமான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?.
இந்த விவகாரத்தில் தற்போது என்ன மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறதோ அதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்யலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. மீதம் இருக்க கூடியவர்களும் அரசின் மறுவாழ்வு திட்டங்களை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் தான் என்பதை தெளிவுப்படுத்துகிறோம். தற்போது அங்கு மீதம் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வைத்த கோரிக்கையில் நாங்கள் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
மீதம் இருக்கும் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வீடு கிடைப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மீதும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு வீடு உடனடியாக கட்டி தரப்படும் என உறுதி அளித்து இருக்கிறார்கள். அதன்படி அவர்கள் செயல்படுவார்கள். ஒரு வேலை அரசு தேவையானவற்றை செய்யவில்லை என்றால், மனுதாரர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடலாம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
The post மாஞ்சோலை எஸ்டேட் விவகாரத்தில் மறுவாழ்வு திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடரலாம்: உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.