புதுடெல்லி: ‘மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் யாரும் இனி வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை’ என பட்ஜெட்டில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10,000 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் ஒன்றிய பட்ஜெட்டில் வெளியாகி உள்ளன. வழக்கம்போல் இந்த பட்ஜெட்டிலும் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்க உள்ள 2025-26ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடந்தன.
பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்தன. இதில், வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த அவர் பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதலைப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. காலை 11 மணிக்கு பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய டேப்லெட்டுடன் மக்களவைக்கு வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடங்கினார். இதில், நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ரூ. 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்கிற புதிய வருமான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டது. தற்போது புதிய வருமான வரி விகிதத்தின்படி ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வரிச்சலுகை அமலில் உள்ளது.
இது இனி ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் யாரும் இனி வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இது தவிர, ரூ. 3 லட்சமாக இருந்த வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் 5 சதவீத வரியும், ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை 10 சதவீத வரியும், ரூ. 12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை 15 சதவீத வரியும், ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை 20 சதவீத வரியும், ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை 25 சதவீத வரியும், ரூ. 24 லட்சத்திற்கு மேல் 30 சதவீத வரியும் ெசலுத்தும் வகையில் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ரூ. 12 லட்சம் வரை வருமான வரியில்லை என்கிற புதிய வரிச்சலுகையின் மூலம், 1 கோடி சம்பளதாரர்கள் பயனடைவார்கள் என்றும், அவர்களின் சுமை குறைக்கப்பட்டு, கூடுதலாக சேமிக்கவும் முதலீடு செய்யவும் முடியும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த சலுகையால் அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி சலுகையை தவிர, பட்ஜெட்டில் பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் இல்லை. குறிப்பாக ரயில்வே துறையில் புதிதாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஏற்கனவே உள்ள திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட்டில் இடம் பெற்றன.
பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் அம்மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பீகாரில் தாமரை விதை உற்பத்தி கூடம் அமைக்கப்படும், தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் அமைக்கப்படும், பசுமை விமான நிலையம் அமைக்கப்படும், பாட்னா ஐஐடி விரிவாக்கம் செய்யப்படும், உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. அதே சமயம், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட இல்லை.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள பிற அறிவிப்புகள்:
* துவரம், உளுத்தம், மசூர் பருப்பு வகைகளில் இந்தியா தன்னிறைவு அடைய சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் 6 ஆண்டு திட்டம் கொண்டு வரப்படுகிறது.
* கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த அட்டைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* பிரதம மந்திரி தன் தானியா எனும் திட்டத்தின் கீழ் 100 மாவட்டங்களில் விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
* காய்கறிகள் மற்றும் பழங்களுக்கென ஒருங்கிணைந்த வகையில், மாநிலங்களுடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்படும். உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு கவனம் செலுத்தப்படும்.
* பீகாரில் தாமரை விதை உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்
* அசாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு 2.5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி ரூ. 2.5 கோடிக்குள் முதலீடு மற்றும் ரூ. 10 கோடி ஆண்டு வர்த்தகம் உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக கருதப்படும்.
* ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 10 ஆயிரம் கோடி நிதி தொகுப்பு உருவாக்கப்படும்.
* சிறு நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான பிரத்யேக கடன் ்அட்டை வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டில் இதுபோன்ற 10 லட்சம் கடன் அட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
* அடுத்த 5 ஆண்டுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 லட்சம் பெண்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்கான புதிய திட்டம் தொடங்கப்படும். அவர்களுக்கு தலா ரூ 2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
* பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* காலணி மற்றும் தோல் துறைக்கு சிறப்புத் திட்டம் வகுக்கப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும்.
* அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த 3 ஆண்டுகளில் புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் ’டே-கேர் கேன்சர் மையங்கள்’ அமைக்கப்படும். இவற்றில் 200 மையங்களில் 2025 – 26 ஆண்டிலேயே அமைக்கப்படும்.
* ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
* அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 120 விமான நிலையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் 4 கோடி பயணிகள் கூடுதலாக விமானங்களில் பயணிக்க முடியும்.
* சுற்றுலா பயணங்களை எளிதாக்கவும், சுற்றுலா தளங்களை இணைக்கவும், தங்குமிடங்களுக்கும் முத்ரா கடன் வழங்கப்படும். மாநில அரசுகளுடன் இணைந்து 50 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும்.
* கல்வித் துறையில் செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவுகளை உருவாக்க ரூ. 500 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும். விவசாயத்திலும் செயற்கை நுண்ணறிவு புகுத்தப்படும்.
* அடுத்த ஆண்டில் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,000 மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 இடங்கள் அதிகரிக்கப்படும்.
* அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் ‘அடல் ஆய்வகங்கள்’ உருவாக்கப்படும். 5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
* காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* டெலிவரி பணியில் உள்ள ஊழியர்கள் இ-ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்து அவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும்.
* புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கான மருந்துகளுக்கான சுங்க வரி குறைக்கப்படும். ஆறு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான 36 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
* லித்தியம் பேட்டரி தயாரிப்பு மூலப்பொருட்களுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
* உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ. 1.5 லட்சம் கோடிக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* மூத்த குடிமக்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி பிடித்தம் கிடையாது.
* வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ. 2.4 லட்சத்தில் இருந்து ரூ. 6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
* புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* அன்று கர்நாடகா… இன்று பீகார் சேலை
ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வரும் சேலை பேசுபொருளாகிறது. அந்த வகையில் இம்முறை அவர் பீகாரின் மதுபாணி ஓவியக்கலையில் உருவாக்கப்பட்ட வெள்ளை நிற சேலையை அணிந்து வந்தது பெரிதும் கவர்ந்தது. இந்த சேலையை பீகாரை சேர்ந்த பத்மஸ்ரீ விருது வென்ற மதுபாணி கலைஞர் துலாரி தேவி பரிசாக வழங்கி இருந்தார். அவரை நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்த போது, பட்ஜெட் நாளில் அணிய வேண்டுமென பரிசாக கொடுத்துள்ளார். நிர்மலா சீதாராமனின் சேலைக்கு இத்தகைய பின்னணி கூறப்பட்டாலும், வரும் நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பீகார் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் திட்டங்கள் அள்ளிக் குவிக்கப்பட்டன.
கிரீன்பீல்டு விமான நிலையம், லக்னோ ஐஐடி விரிவாக்கம், தாமரை விதை வாரியம் என பல திட்டங்கள் பீகாருக்கு அறிவிக்கப்பட்டது. இப்படி, பாஜவின் கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாருக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் அந்த மாநிலத்தின் பாரம்பரிய சேலையை நிதி அமைச்சர் உடுத்தி வந்தாரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த 2023ம் ஆண்டு பட்ஜெட்டில் அப்போது சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருந்த கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரிய கசூதி எம்ப்ராய்ட்ரி போட்ட சிவப்பு நிற பட்டு புடவையை நிர்மலா அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக 8வது பட்ஜெட்
* கடந்த 2014ல் ஒன்றியத்தில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பாஜ அரசு தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 14வது பட்ஜெட் இது. இதில், 2019, 2024 மக்களவை தேர்தலுக்காக 2 இடைக்கால பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
* 2024 மக்களவை தேர்தலில் வென்ற பிறகு, பாஜவின் 3வது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்டது.
* ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தனது 8வது பட்ஜெட் உரையை நேற்று நிகழ்த்தினார்.
* இதுவரை இந்தியாவில் மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ப.சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். தற்போது பிரணாப் முகர்ஜியின் சாதனையை சமன் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
* கடந்த 2019ல் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 128 நிமிடங்கள் பட்ஜெட் உரை நிகழ்த்தினார். அதிகபட்சமாக 2020ல் 159 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையாற்றினார். 2021ல் 110 நிமிடங்கள், 2022ல் 92 நிமிடங்கள், 2023ல் 87 நிமிடங்கள், 2024ல் 58 நிமிடங்கள், 2024 இடைக்கால பட்ஜெட்டில் 82 நிமிடங்கள் பட்ஜெட் உரை இருந்தது. இம்முறை 74 நிமிடங்கள் (1 மணி நேரம் 14 நிமிடம்) பட்ஜெட் உரையாற்றினார்.
* தெலுங்கு கவிதை வாசித்த நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, அவர், தெலுங்கு எழுத்தாளர் குரஜாடா அப்பா ராவின் ‘தேசமாண்டே..’ கவிதையுடன் பட்ஜெட் உரையை தொடங்கினார். இக் கவிதையின் பொருள், ‘தேசம் என்பது மண் அல்ல; மக்கள்’ என்பதாகும். தொடர்ந்து அவர் பேசுகையில், வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி என்ற திருக்குறளையும் வாசித்தார். உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் செங்கோன்மையை எதிர்பார்த்து வாழ்வார்கள் என்பதே இதன் பொருள்.
* டெல்லி தேர்தலுக்காக வருமான வரிச் சலுகையா?
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்த்தகத்தினரின் நீண்ட கால கோரிக்கை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அறிவித்த பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்தது. தனிநபர் வருமான வரியில் சிறுசிறு சலுகைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதனால், பல மாநிலங்களில் பாஜவின் வாக்குவங்கியாக இருந்த நடுத்தர குடும்பத்தினர் வேறு கட்சிகள் பக்கம் சாயத் துவங்கினர். வரும் 5ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இந்த முறையும் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் டெல்லி வாக்காளர்களை கவர தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை என்ற அறிவிப்பை பாஜ அரசு வெளியிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் இனி வருமானவரி கட்ட வேண்டாம்: கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள்; ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிப்பு; மொத்த பட்ஜெட் ரூ. 50,65,345 கோடி appeared first on Dinakaran.