புதுடெல்லி: இந்தியாவில் தேச விரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரையும், சட்டவிரோத குடியேறிகளையும் தடுப்பதற்காக குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மக்களவையில் கடந்த மாதம் 27ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் எனக்கூறிய எதிர்க்கட்சிகள் பல்வேறு திருத்தங்களை முன்மொழித்தனர். ஆனால் அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்ட பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், அரசியல் லாபத்திற்காக சட்டவிரோத குடியேறிகள் நாட்டில் நுழைய உதவியதோடு, வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் கார்டில் அவர்களின் பெயர்களை சேர்த்து தொடர்ந்து அவர்கள் தங்கியிருக்க வசதி ஏற்படுத்தி தந்ததாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் ஒப்புதலுடன் விரைவில் இந்த மசோதா சட்டமாக உள்ளது. இந்த மசோதாவின்படி, போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தி இந்தியாவில் நுழைவது அல்லது தங்கியிருப்பது கண்டறியப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
The post மாநிலங்களவையிலும் குடியேற்றம், வெளிநாட்டினர் மசோதா நிறைவேற்றம்: விரைவில் சட்டமாகிறது appeared first on Dinakaran.