புதுடெல்லி: ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பணியில் சேர்க்கப்பட்டதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடந்தது. இதில், எதிர்க்கட்சி எம்பிக்கள் ரயில்களில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ரயில்வேயில் ஊழியர்கள் நியமனம் நடக்கவில்லை என பல எம்பிக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் ரயில்வேயில் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர்.
மேலும் 1 லட்சம் பேரை ரயில்வேயில் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வேயில் மொத்தம் 12 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 40 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவர்கள். நாடு முழுவதும் இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் கவாச் எனும் தானியங்கி பாதுகாப்பு தொழில்நுட்பம் அமைக்கப்படும். இது ரயில்கள் மோதுவதை தவிர்க்கும். பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் ஏழைகள், நடுத்தர மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே ரயிலின் பொது பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறுவதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post மாநிலங்களவையில் விவாதம் ரயில்வேயில் 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பணியில் சேர்ப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.