திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். இவருக்கும், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஆர்ச்சா என்பவருக்கும் கடந்த 1ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் அன்று மாலை கணவன் வீட்டுக்கு சென்ற ஆர்ச்சா, தன்னுடைய 50 பவுன் நகைகளை படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். மறுநாள் பீரோவை திறந்தபோது 30 பவுன் நகைகளை காணவில்லை. போலீசார் விசாரணையில் நகைகளை திருடியது அர்ஜுனின் உறவினரான விபினி (46) என்ற பெண் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விபினி புதுமண தம்பதியை பார்ப்பதற்காக அர்ஜுனுடைய வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புதுமணப்பெண் ஆர்ச்சா தனது தங்க நகைகளை எங்கு வைத்துள்ளார் என்பதை விபினி பேச்சுவாக்கில் அறிந்துகொண்டார். ஏற்கனவே விபினிக்கு தங்க நகைகள் மீது தீராத ஆசை இருந்த நிலையில் அவற்றை திருட திட்டமிட்டுள்ளார். நைசாக பேச்சுக்கொடுத்துக்கொண்டு இருந்த விபினி அந்த வீட்டில் உள்ளவர்கள் சற்று அசந்த நேரத்தில் அர்ஜுனுடைய படுக்கையறைக்கு சென்று அங்குள்ள பீரோவில் ஆர்ச்சா கழற்றி வைத்திருந்த தங்க நகைகளை மின்னல் வேகத்தில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். திருடிய நகைகளை எல்லாம் பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டிவிட்டு அதனை அர்ஜுனின் வீட்டுக்கு அருகே யாருக்கும் தெரியாமல் வீசியுள்ளது தெரிய வந்தது.
The post முதலிரவு அறையில் மணமகளின் நகைகளை திருடிய பெண் கைது appeared first on Dinakaran.