டாக்கா: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மாணவர்கள் போராட்டம் காரணமாக பதவி விலகி தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. ஷேக் ஹசீனா மீது 42 கொலை வழக்குகள் உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த யூனுஸ் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதனிடையே வங்கதேச நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய முகமது யூனுஸ், “2026ல் தேர்தல் நடத்தப்படலாம்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முகமது யூனுஸ் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து யூனுஸ் அரசு வௌியிட்ட அறிக்கையில், “நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கவும், அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு எதிராக நடந்து வரும் விசாரணைகளில் தொடர்புடைய சாட்சிகள், புகார்தாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அவாமி லீக் கட்சியை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடை வழக்கு விசாரணை முடியும் வரை தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்தது சட்டவிரோதம் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அவாமி லீக் கட்சியின் பதிவை ரத்து செய்வது குறித்து இடைக்கால அரசின் முறையான அறிவிப்புக்காக காத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பதிவு ரத்து செய்யப்பட்டால் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுதேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியாது.
The post முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு வங்கதேச அரசு தடை appeared first on Dinakaran.