புதுடெல்லி: முல்லைப் பெரியாறு தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேப்போன்று இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சீஸ் ஆக்யோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், “முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கருதி நீர் மட்டத்தின் அளவை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
மேலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக தான் உள்ளது. அணையி்ன் பராமரிப்பு பணிகளுக்கு கேரளா அரசு இடையூறாக இருக்கிறது. அணை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தலாம். ஆனால் முதலில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய கேரளா அனுமதிக்க வேண்டும். பேபி அணை பலப்படுத்தல், புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேரளா அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து கேரளா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,“அணை பாதுகாப்பு தொடர்பாக ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு நடத்த வேண்டும். நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்தி இருக்க வேண்டும் . குறிப்பாக அணை எங்களது மாநிலத்தில் உள்ளது.
மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,“இந்த விவகாரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தப்பட்ட விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டது ஆகும். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. அதுகுறித்து மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்னையும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இரண்டு முறை தீர்ப்புகளை வழங்கியுள்ளது. மேலும் அணை விவகாரத்தில் தொடர்ந்து இருதரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்தால் எந்த தீர்வும் கிடைக்காது.
அணை பலப்படுத்தும் விவகாரம் குறித்த வழக்கை மட்டும் விசாரித்து முடிவெடுக்கலாம். மேலும் இந்த விவகாரத்தில் எங்களது முக்கிய கேள்வி என்னவென்றால், ஏற்கனவே அணை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு குழு தொடரவேண்டுமா அல்லது 2021 அணை பாதுகாப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா என்பது தான். இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலமும் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்க எந்த பிரச்னையும் இல்லை: உச்ச நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.