தமிழ்நாட்டில் தனி திரையரங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைய தொடங்கியுள்ளன. ஓடிடி தளங்களின் வருகை காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பது குறைந்துவிட்டது. பார்வையாளர்கள் வராததால் புதிய படங்கள் என்றாலும் பல காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலை தியேட்டர்காரர்களுக்கு தற்போது ஏற்பட்டு வருகிறது. இல்லையென்றால் குறைவான பார்வையாளர்களுடன் திரையரங்குகளை நடத்த வேண்டி இருக்கிறது.
இது தவிர டிக்கெட் கட்டணத்தில் மாநில அரசால் விதிக்கப்படும் கேளிக்கை வரி, மத்திய அரசின் ஜிஎஸ்டி, மாநில அரசின் ஜிஎஸ்டி என சேர்த்து வசூலிக்கப்படுகிறது. மாநில அரசுக்கான இரட்டை வரியைக் குறைக்கப் பலமுறை கோரிக்கை வைத்தும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன என்கிறார்கள். முதலில் சென்னையில் தனித்திரையரங்குகள் மூடப்பட்டு வந்த நிலையில், இப்போது மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் சிறுநகரங்களிலும் மூடப்பட்டு வருகின்றன.