பெங்களூரு: மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் ( மூடா) முறைகேடு புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்க கோரி சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்ற நீதிமன்றம் லோக்ஆயுக்தா போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து லோக்ஆயுக்தா போலீசார் மூடா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி கடந்த மாதம் உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதனிடையே மூடா நில முறைகேடு புகாரை விசாரணை நடத்திய மைசூரு மாவட்ட லோக்ஆயுக்தா எஸ்பி உதேஷ், கொடுத்துள்ள விசாரணை அறிக்கையில், ‘மூடா நிலமுறைகேடு புகாரில் சித்தராமையாவின் பங்கு எதுவுமில்லை. இது தொடர்பாக அவர் அதிகாரத்தை பயன்படுத்தி கடிதம் எழுதியதோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்கான எந்தவிதமான சாட்சி, ஆதாரங்கள் கிடையாது. முறைகேடு நடந்துள்ளதாக புகார்தாரர் கூறியிருந்தாலும் அதற்கு போதுமான சாட்சிகள் எதையும் ஆதாரத்துடன் கொடுக்கவில்லை.
இந்த புகாரில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தராமையா, இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தராமையாவின் மனைவி பார்வதி, மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுனசாமி ஆகியோர் மீதான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதால், அவர்கள் மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்யும் வகையில் பி.ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். லோக்ஆயுக்தா எஸ்பி உதேஷ், தயாரித்துள்ள அறிக்கை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும்.
The post மூடா நில முறைகேடு வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரமில்லை: லோக்ஆயுக்தா விசாரணை அறிக்கை appeared first on Dinakaran.