டெல்லி : கொரோனா தொற்றை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் கொண்டுவர நாடாளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “கோவிட் பேரிடருக்கு முன்பு இருந்தது போல் மூத்த குடிமக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோருக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கிட வேண்டுமென பாராளுமன்றத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வலியுறுத்தியுள்ளார். கோவிட் பேரிடரை காரணம் காட்டி மத்திய அரசு ரயில் பயண கட்டணத்தில் வழங்கி வந்த சேவையை வாபஸ் பெற்றது. ஆனால் கோவிட் முடிந்து இயல்பு நிலைமைக்கு திரும்பிய பின்னரும் மத்திய அரசு இந்த கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க முன் வரவில்லை.
இதன் காரணமாக பல தரப்பட்ட மக்களுக்கு அதிக பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இதர மக்களுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகை நிறுத்தி வைத்த காரணத்தால் இத்தரப்பு மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். முதியோர், மாணவர்கள் மற்றும் பல சேவைகள் புரியும் மக்களின் துயரை போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக மேல் குறிப்பிட்ட மக்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் சலுகைகள் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பினை அரசு ஈடு செய்ய வேண்டும். இவ்வாறு பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீரமானம் ஒன்றினை கொண்டு வந்து வலியுறுத்தி உள்ளேன்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்க பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.