மொழி நுட்பத்தில் புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் ஸ்டார்டப்-டிஎன் அமைப்பும் தமிழுக்கு புதிய படைப்புகளை மொழி நுட்பத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் திரள், வாணி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்களும் இணைந்து தமிழி நிரலாக்கப் போட்டியை அறிவித்தன. மூன்று மாதங்களாக நடந்து வந்த இப்போட்டி நேற்று இறுதிச் சுற்றுடன் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வு பற்றி இணையவழி சிறப்பான சேவைகளை வழங்கி வரும் வாணி பிழைதிருத்திச் செயலியின் நிறுவனர் ‘நீச்சல்காரன்’ ராஜா இந்து தமிழ் திசையிடம் தெரிவித்தபோது: “மலேசியா, ஜப்பான், கர்நாடக, ஆந்திரா உட்பட பல உலகின் பல பகுதிகளில் இருந்து 142 அணிகள் விண்ணப்பித்திருந்தனர். உணர்ச்சிகளையும் மூல மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் தீர்வை உருவாக்கிய திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும் ஜெம்மா மொழி மாதிரியை தமிழ் நடைக்கு மேலும் ஒத்தியைவு செய்த கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் பரிசையும் பண்பாட்டுச் சுற்றுலாச் செயலியை உருவாக்கிய சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் மூன்றாம் இடமும் பிடித்தனர்.சிறப்பாக முயன்ற ஐந்து மாணவ அணிகளுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன.